Sunday, August 19, 2012

தெரியாத விடையைத் தேடி...! பகுதி 1

வல்ல யுகம் படைத்தாய் வானிற் சுழல்வகுத்தாய்
நில்லென் றொளி செய்தாய் நேர்நிகர்த்த லற்றதெனக்
கல்லும் மண் கொண்டுருளக் காணும் புவிசெய்து
நல்லமனம் கொண்டங்கு நாம் வாழ வழிசெய்தாய்

பூவாய் வாசங்காண் பொருள்படைத்துப் போகையிலே
தூவாய் மலரெனவே தூங்கும் பூஞ் சோலைதரு
காவாய் நீதென்றலெனக்  கமகமக்கும் வாசமுடன்
போவார் வருவோர்க்கு புதுவாசம் தந்திடவும்

நாவால் இசைபடிக்க நாதம் இழைந் தினிமைகொள
நோவாய் மருந்தெனவும் நீசெய்தாய், சூட்சுமங்கள்
நீவான் பரப்பிட்டு நிகரற்ற சுழல் அண்டம்
ஆ வாய்பிளந் தலற ஆச்சரியங் கள் படைத்தாய்

தேவி படைத்தவளே திக்கெட்டும் காண்பவளே
ஏவி உலகத்தை இயக்குவளா முனைக் கண்டு
பாவி கரந் தூக்கிப் பணிதல் விட வேறெதுவும்
ஆவி இருக்கும்வரை அறியேன் அகபொருளே!

ஆயின் தமிழ்குழந்தை ஆனஇவன் வாயெடுத்துத்
தேயின் அறம் நேர்மை திசைமாறி நீதிசெலின்
வாயாற் குரல்கொண்டு வாழவெனும் உரிமைதனை
நீயிற் குவலயத்தில் நிமிர்ந்து கேள் என்றதனால்

தீயாய் கனல்தகித்தும் தெய்வம் சொல் குற்றமென
வாயால் கருகியவர் வழிவந்தோன் கேட்கின்றேன்
நீயாய் தெரிந்துமிந் நிலையற்ற பொய்வாழ்வைப்
பேயாய்  திரிந்துகெடும் பிறவிதனைச் செய்தனையோ

அழகுத் திருமேனி அற்புதமாய் சிந்தனைகள்
குழலும் திருமுகத்தில் குங்குமத்தை நெற்றிகொள
மழைலைக் குரல் மடியில் மன்மதனின் அம்புபட்டு
விழுந்த கனிஎனவும் வீரமுறும் வாழ்வீந்தாய்

அவளும் நானெனவும் அகமெடுத்த பாசமதில்
துவளும் மலர்க் கொடியைத் தோளிட்டுத் தூணாக
தவழும் குழந்தைகளும் தாங்கி கடல்நடுவே
கவிழும் படகொன்றின் கரையறியாப் பயணமிது

வாழும் இவ்வளமேனி வந்ததுமுன் சக்தியெனும்
நாளும் கிழக்கேறும் நல்லுதயச் சூரியனின்
ஆழத் தெறித்தஅனல் அணையும் கரித்துண்டுகளாம்
மீளத் தீ பற்றுமொரு மீள்வுக்காய் காத்திருந்தோம்

ஓளியின் குழந்தைகள் நாம் ஒளியாக இருந்தெம்மை
வெளியில் வான்பரப்பில் விளையாடு எனவிட்டு
தெளியும் மனதுடனே திகழும் வாழ்வமையா
பழியும் பாவமிடும் பச்சையுடல் ஈந்தாய் ஏன்?

பொழியும் சிலைசெய்யும் பொற்கலைஞன் கரம்பற்றும்
உளியும் அவன்மனதின் உருவத்தை முன்னெடுக்கும்
நெளியும் திரைகடலின் நீலம் கொடுத்தவளே
அழியும் வாழ்வுக்கேன் அனைத்தும் இருட்டமைத்தாய்

மொழியும் பலபேசி  முன்னறியா பெரும் காழ்ப்பு
தொழிலோ இறைமை யெனத் தீமை செயப் பேரும்வைத்து
அழிவை பொலிவாக்க  அரசுடைமை  நட்புறவு
கழிவைகுணம்கொண்டகாவலர் பெருகிவிட

உலகம் சுழல்வதென்ன உண்மைகளின் வெம்மைதனை
கலகம் கொலைதீமை கள்ளர்களின் கொள்ளைதனை
நிலம் மேற் கொடுமைகளை நித்தம் எண்ணிக் குற்றமுடன்
தலையும் சுற்றி  தடு  மாறி  நிற்கா ஓடுகுதோ

(பகுதி 2 ல் தொடரும்)


2 comments:

 1. சிந்திக்க வைக்கும் வரிகள்... தொடருங்கள்... நன்றி...

  ReplyDelete
 2. தொடர்ந்து தரும் உற்சாக வார்த்தைகள்
  தீயாய் உணர்வுகளை சூடேற்ற கவிவானில் பொழியும் புதுநிலவின் உற்சாகத்தோடு நான்....தொடர்கிறேன்!
  நன்றி
  அன்புடன் கிரிகாசன்

  ReplyDelete