Monday, August 13, 2012

தமிழுக்கு மாலை

         
எண்ணம் இனித்திடப் புன்னகை பூத்திடும்
இன்பத் தமிழழகே - நின்னை
கண்டதும் கற்பனை வெள்ளம் மனதிடை
கட்டுடைத் தோடுவதேன்
எண்ண விளக்குகள் மின்னிஎரிந்திட
எங்கும் ஒளி பரந்தே -  இடை
விண்ணிலெழும் அதி மின்னலொளிர்வுற
மேனிசிலிர்க் கிறதே

தண்ணமுதே நீயும் உண்ண உண்ணவென்ன
தேனொழு கும்பழமோ - இந்த
மண்ணில் உன் மாபுகழ் மாவுலகெங்கிலும்
மாலையின் பூந் தென்றலோ
புண்படுமாம் நெஞ்சு போலவலி யெடுத்
தாலுமென் இன்தமிழே - உனைப்
பண்ணிசைத்தே மனம் பாடிடப் போகுது
பக்கமில்லா தொழிந்தே

சொல்லச்சொல்ல இன்னும் இன்னுமுளதெனச்
சொல்வது பொன் தமிழோ - அது
மெல்லெனக் காற்றிடை மேவிப் பரவிடும்
மாடத்தொளி விளக்கோ
இல்லை இல்லைஇது என்றும் கிழக்குவான்
ஏறுஞ் சுடரொளியாம் - இதற்
கெல்லையிலை இது ஓடுமுலகத்தின்
உண்மைப் பெருஞ்சுடராம்

கல்லெனக் காணினும் மெல்ல உருக்கிடும்
காவியத் தேன்மழையே -  எமை
செல்லென மேடையில் சித்திரம் தீட்டவும்
செய்திட வைப்பவளே
சொல்லைஉடைத்துநல் சுந்தர வண்ணங்கள்
சேர்த்து வரைந்திடவும் -நல்ல
சொல்லருங் காவிய மாம்தமி ழோவியம்
மெல்ல உயிர்பெறுமே!

மேவியலை எழும்நீர்க்குளமோ தமிழ்
மெத்தப் பெருங்கடலோ - அலை
நீவிமனதிடை நூறு உணர்வெழ
நெஞ்சங் களித்திடுமோ
தேவி கரம்தந்து தீமையின் வெம்மையில்
திண்டாடு வோர்தமையே - புனல்
தாவி குளித்தெழத் செய்பவளோ தமிழ்
தண்மை யளித்திடுதே

****************

1 comment:

  1. சிறப்பான மாலை... பாராட்டுக்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete