Thursday, August 2, 2012

வேண்டலும் வேண்டாமையும்


தேர்வேண்டேன், தேருலவும்
   தேவனெழில் யான்வேண்டேன்
ஊர் வேண்டேன், ஊர்புகழ
  உத்தமனாய் உயர் வேண்டேன்
பேர் வேண்டேன் பெருமைகளைப்
   பேசுகின்ற தாய் வேண்டேன்
சீர்கொண்டு தினம்பாடும்
    செந்தமிழை  வேண்டுகிறேன்

நீர்கொண்டவிழிபொங்க
    நிற்குநிலை வேண்டேனுட்
கார்சூழும் உள்ளமதில்
  காணுகின்ற துன்ப மழை
போரென்ற இடிமின்னல்
   புகை தீயும் வேண்டேனுன்
நேர்நின்று கவிபாடும்
  நெஞ்சத்தில் தமிழ் கேட்டேன்

வீரென்றே அலறிவிழ
  வேகத்தில் உயிரோடும்
யார் கொண்டார் எனவெண்ணா
   யாக்கைதனைப் புறந்தள்ளி
வேரின்றி வீழ்மரமாய்
   வீச்செழுந்து  தீபொசுக்க
நேரோடித் தப்புமுயிர்
 நேர்மையியல் இனிவேண்டேன்

ஏர்கொண்ட உழவன்பால்
    இயங்கும்நல் லுளம் கேட்டேன்
ஓரின்ப வாழ்வென்றால்
    உலகில் நற்றமிழ் கேட்டேன்
தேரென்று தேராமல்
   தேனூறும் சொற்குழையல்
தீருந்தன் பசியென்று
    தீந்தமிழ்சொல் வரங்கேட்டேன்.

கோரென்று மலர்கொய்து
  கூடியொரு மாலைசெய
பாரென்று சார்ந்துள்ளம்
   படுகுழியில் வீழமனம்
சேரென்று  துயர்தந்து
   சீற்றங்கொள் விதிவேண்டேன்
வாரென்று தமிழின்பம்
     வாய்க்கும் நல் வளம்கேட்டேன்


************

No comments:

Post a Comment