Saturday, August 18, 2012

படும் பாடு..


ஆடென்று சொன்னாலே அதிர்ந்துஆடும்
அம்பலத்து நடராசா உந்தன் செயலோ
ஆடென்று ஆடவைத் தகிலம் கூடி
அழித்தெங்கள் இனம் கொல்லக் காண்டாயன்றோ
சூடென்ற வேள்வியிற் தோன்றும் வேங்கை
தோல்தன்னும் கச்சையாய் கொண்டாய் இன்றோ
நாடென்று எழுந்தவர் நாமம் கேட்டு
நடுவில்மற்  றவரோடு நின்றாய் ஏனோ

பாடென்று தம்பாட்டில் இருந்தோர்தன்னை
பாடாத பாடாகப் படுத்தி நீயும்
பாடென்று பாட்டீந்து தருமிக்கன்று
படுத்தியதோர், பாடாகப் பாவி யீழம்
பாடடா சுதந்திரம் ஒன்றேபாடு
பாடதைக் காணேல்போம் உன்பாடென்றே
ஓடடா என்றெழும் உணர்வை ஈந்தும் பின்
உன்பாட்டில் ஏதேதே ஆடிவிட்டாய்

கூடென்றும் கொள்ளென்றும் உயிரை ஈந்தாய்
கொண்டோம் நாம் உன்நெற்றி கண்ணின் முன்னே
காடென்று கனல் பற்றி எரிந்தோமய்யா
கண்டும் கண்மூடாமல் நின்றாய் ஏனோ
நாடென்று ஒன்றாகி நின்றோம் இன்றோ
நாம் விட்டுபோகோம் எந்நாளும் ஓடித்
தேடென்று தேடித்தான் தேசம் கொள்வோம்
தில்லை நடராசனே தீமை தவிராய்

ஓடென்று சொன்னாலுன் திருவோடென்போம்
ஓடோம் எம்மிடம் விட்டு ஓடமாட்டோம்
மூடென்று சொன்னால்உன் முக்கண் என்போம்
மூடோம் வாய் மூடிப் பேச்சற்றல் கொள்ளோம்
கேடென்று என்செய்வாய் கேட்கும் ஓலம்
கூராயுன் சிந்தையினுள் கேட்கும் கண்ணும்
மூடென்று ஆகும்மனம் வைக்கும் அன்பால்
முற்றும் நிலைமாறி நம் வாழ்வும்ஓங்கும்

1 comment:

  1. /// மூடென்று ஆகும்மனம் வைக்கும் அன்பால்
    முற்றும் நிலைமாறி நம் வாழ்வும்ஓங்கும் ///

    அருமை... தொடருங்கள்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete