Saturday, August 11, 2012

மாலைகள் தோளில் விழும்போது....

பொற்கதிரோ பொன்நிழலோ
     பூத்தஎழிற் தாரகையோ
வெற்றிடமோ வான்வெளியில் 
    விண்ணதிரும் தீம்புனலோ
அற்புதமோ ஆனந்தமோ
    ஆனவழி போகுமிவன்
சுற்றிவர ஆடுமெழில்
    சுந்தரவிண் பூந் துகளோ

நிற்பதுமேல் வானமெனில்
     நேர்வரும்வெண் மேகங்களோ
கற்பனையோ சொப்பனமோ
      காற்றுமழை கடுங்குளிரோ
புற்றரையோ நித்திரையில்
       புள்ளினங்கள் ஆர்த்தெழவே
உற்றசுகம் போலிதுவோ
       உள்ளமதின் பொய்க்கனவோ

சுற்றுவது பூமியதோ
      சூழுவது பொற்கிரணக்
கற்றைகளோ சுற்றுமிவன்
      காண்புகழோ வீறுகொள்ளக்
கொற்றவனை நேர் நிகரோ 
       கூடிவரும் சந்தமுடன்
நற்றிணையும்  நெஞ்சங்களால்
      நான் எடுத்தபுது வாழ்வோ

சற்குணமோ சொற்சினமோ
     சார்ந்தவரைப் பற்றுவனோ
அற்றவனோ அறிவுதனை
     விற்றவனோ என்றவனை
முற்றமதில் முழுமதியும்
     முன்னெழுந்து பொற்கிரணம்
சுற்றிவர நர்த்தமிடச்
     சொல்லரிய சுகம்தருதே

கற்குளமோ நீரலையிற்
     காணுமெழிற் தாமரையில்
நிற்பவளே உன் அருளால்
      நெஞ்சிலுனைக் கொண்டவனைக்
கற்றறிந்தோர் சொல்லிலெனைக்
      களிப்புறவே ஆக்குவளே
புற்றெழுந்த மேனியினன் 
      போகும்வரை மறப்பதுண்டோ


No comments:

Post a Comment