Saturday, August 25, 2012

வரமொன்று தந்தாள் !


விக்குகிறேன் திக்குகிறேன் விளையாடிப் பூமழையில்
சொக்குகிறேன் நிற்குமிடம் செந்தமிழ்காடோ
நெக்குவிடும் தேன்மலர்கள் நிற்பனவோ சாய்வனவோ
தொக்குமினித் தேன்சொரிந்தே சிந்துகுதாமோ
எக்குகிறேன் ஏகிறுகிறேன் இரவினொளி நிலவினிலே
பக்கமிருந் துற்றதமிழ் சொல்லிட எண்ண
சிக்குங்கரு நீள்முகிலுள் சுந்தரவான் மதியுறக்க
எக்கருமை செய்ததிவை கற்பனை போக!

செக்கச்சிவந் தாதவனும் சேருமொளிக் காலைவரை
இக்கதிதான் இருள் மருவ அற்புதவானில்
தக்கஎழில் கொண்டெழவும் தன்னுடையோன் விண்ணொளிர
மொக்கலர்ந்து காணுகிறாள் தாமரையாளே
திக்கிலொளி கீழெழவும் தென்றல்தொடப் பூமலர
லக்குமியும் வீணைமகள் வீரத்தின் தாயே
முக்குணமும் கொண்டவளாய் முன்னிருந்தாள் தேவியவள்
மிக்க எழில் சக்தியுடன் மென்மலர்மீதே

செக்கிழுத்த தாய்ச் சுழன்று சுற்றிவந்து வீழ்ந்தெழுந்தேன்
சக்தியிடம் வேண்டும் வரம்என்பது போல
மிக்க தமிழ் கூறுவையுன் மேன்மைதனுக் கீந்திடலாம்
துக்கம்விடு சொல்லுமனம் தோன்றவதேது
`சுக்குப்பல நூறெனத்தூள் ஆக்கும்பலம் ,வீரமதும்
புக்குமிடம் வெல்லும்பலம் போலவும்வேண்டும்
அக்கம்பக்க மெங்குமிலா அற்புதமாய் பொன்விளைந்து
சொக்கி நிற்கும் செல்வமென மற்றது வேண்டும்

சக்கரமோ சுற்றுவதாய் தாழும் எழும் வாழ்வினிலே
அக்கறையாய் பாடுந்தமிழ் அத்துடன்வேண்டும்
திக்கிலெலாம் நின்றவளோ தேன்கவிதைச் சொற்குரலால்
பக்குவம்பார் ஒன்று மட்டும் கொள்வதுகூடும்
இக்கணமென் றோதிமன இச்சைதனை விட்டுவிடு
முக்கனியில் ஒன்றுவிழி மூடிஎடென்றாள்
கைக்குள் விரல்ஒன்றெடுத்து கண்விழிக்கா மூடியதாய்
முக்கனியில் ஒன்றுதொட முத்தமிழ்கொண்டேன்

அற்புதமுன் ஆசைகளில் ஆனதுஒன் றாகியதே
பொற்கதிரில் போகமுதல் புன்னகைத்தாள் காண்
சிற்பஎழில் தேன்மலரால் தெய்வமெனும் அன்னையவள்
கற்பனையின் நாயகனே கைதொடும்போது
சற்று இடம் மாறிடினும் தங்கத்தமிழ் தானிருக்கும்
பற்றுடையேன் நின்கனவில் பாரடா என்றாள்
வித்தகியாய் காணுபவள் விட்டகலத் தொட்டெடுத்தேன்
மற்றபழம் மீதுங் குறி செந்தமிழ் கண்டேன்

No comments:

Post a Comment