Wednesday, July 11, 2012

முடியிழந்த அரசன்........!

சாந்தம் தவழும் முகத்தொடு அங்கவன்
சாமியாய் வீதியிலே
நீந்தும் பிறவியென் றார்க்கும்கடற்புயல்
நேர்ந்ததை எண்ணி நின்றான்
காந்தமெனும் இருநேர்விழி மூடியோர்
காலத்தின் கோலமெண்ணி
வேந்தனெனக் கொண்டவாழ்வு இழந்திட
வீதியிலே கிடந்தான்

கோலமறிந்தவன் கூடிச் சுவைகொண்ட
கொத்தெனும் மாங்கனிகள்
காலமெனும் இளங்காற்றில் பழுத்த
கனிச்சுவை தான் அறிவான்
பாலமுத மொழி பைந்தமிழில் வீரம்
பேசிய போதி லெல்லாம்
நீலவெளி விண்ணில் நேரெழுந்த கதிர்
நின்றநிலை யறிவான்

ஊதியடித்தது காற்று இரைந்தெழ
ஏனோ இருள்மருவ
காதி லொலித்திட்ட காலின் சலங்கைகள்
கண்ணை மறைத்துவிட
சேதி புகுந்ததும் ஏது? மனங்கோணி
சில்லெனும் கூதலிட
பாதி இழந்த நிலவுவெனக் கண்டனன்
பாரொளி போயிருக்க

மீண்டும் பிறக்கத் துடித்து நின்றான் மன
மின்னலைக் காணவில்லை
கூண்டில் வெளிவரப் பாடுபட்டான் ஏதும்
கொள்ள முடியவில்லை
ஆண்டுபல சென்று போனதினால் மன
ஆற்றல் அழிந்ததுவோ
தோண்டி மனதிடை ஊன்றி வளர் பயிர்
தூய தளிர் வருமோ

சொல்லடி சக்திஉன் தூய ஒளியினால்
சுட்டுக் துயர் பொசுக்கி
வல்லமை தந்தவன் விண்ணின் ஒளிதன்னை
வேண்டும் வரைகொடுத்து
பல்விதமாயும் படர்ந்து உரம்கொண்ட
பச்சை மரம் வளர
நல்லொரு சக்தியை நீ வழங்கு அருள்
நன்மை யடையச்செய்வாய்

**************************

    Reply     Reply to author      Forward  




2 comments:

  1. சொல்லடி சக்திஉன் தூய ஒளியினால்
    சுட்டுக் துயர் பொசுக்கி
    வல்லமை தந்தவன் விண்ணின் ஒளிதன்னை
    வேண்டும் வரைகொடுத்து
    பல்விதமாயும் படர்ந்து உரம்கொண்ட
    பச்சை மரம் வளர
    நல்லொரு சக்தியை நீ வழங்கு அருள்
    நன்மை யடையச்செய்வாய்

    சிறப்பான பிரார்த்தனைகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் !
    சில நாட்களாக கவிதைகளில் சற்று சோகம்‌ இழைந்திருப்பதாக எழுதுகிறேன். விரைவில் மாற்றம் வரும் தங்கள் பாராட்டுக்கு நன்றிகள்!!

    ReplyDelete