Thursday, September 20, 2012

அஞ்சலி

இடிவிழுந்தும் தாங்குமனம்
..  எதையிழந்தும் ஓங்கும் இனம்
.. உமையிழந்து துடிதுடிக்கிறோம்
அடிவிழுந்து நொந்த தென
.. அறிவிழந்து நெஞ்சமழ
.. அகமழிந்து துயரெடுக்கிறோம்
வெடி பரந்து வானுடைந்து
.. விதியெனஎம் தலைவிழவும்
.. வலியெடுத்த சேதி யாகவே
கொடியதுன்பக் கனவிதுவோ
.. கொண்ட சேதி பொய்யிலையோ
.. கூடுமாஎன் றுடல்நடுங்கிறோம்.

மடி முழுக்க அனல் கொதித்து
.. மாபெருந்தீ கொட்டியதாய்
.. மதிமயங்கி துடிதுடிக்கிறோம்
குடி மறந்து ஊர் நடுவே
.. குரல்பரந்து அழுதுகத்தி
.. கொண்டதில்நாம் விழிசிவக்கிறோம்
நெடிதுயர்ந்த ஆலெனவே
.. நிமிர்ந்து நின்ற உரமென்னவோ
.. நிர்க்கதியென் றாகிநிற்கிறோம்
கடிதெனவே புயலெழவும்
.. கண்களில் மண் தூவியதாய்
  காரிருளில் பார்வை கெட்டுள்ளோம்

விடிவரும் என்றுளமே
..  விரும்பியநல் வாழ்வுகாக
...  வேண்டியெழ விதி முடித்ததேன்
படியளந்து கல்லிடையில்
..   பசியெடுத்த எறும்பினுக்கும்
 ..  பார்த்து நல்ல அமுதமீந்தவா
கொடியமனம்,  நல்லவரைக்
.. குவலயங்கண் வாழவிடா
.. கொண்டுசென்ற நீதியென்னவோ
மடியிருந்த பொன்னிழந்து
.. மனமழிந்து உயிர் நலிந்தோம்
.. மறந்தும் மனம் சாந்தி கொள்ளுமோ?

No comments:

Post a Comment