Tuesday, September 11, 2012

வீரத்தமிழே !

பொங்கிஎழு தமிழேநீ பொய்கையெழில் அலையாக
புரண்டது போதும் இன்றே
தொங்கிவிழும் பேரருவி தூவும்மழை வெள்ளமெனத்
துடித்தெழு பொங்கிஓடு
கங்குல் இருள் கண் மறையக் காற்றோடப் பூமலரக்
காணும்சுகம் தந்ததமிழே
செந்தணலைச் சிந்து,மலர் தேன்தமிழின் தாழ்வெண்ணிச்
சிவந்ததுநீ கொட்டுஅனலே

தங்கமென மின்னுமெழிற் தமிழேயுன் அழகெல்லாம்
தணி கொஞ்சம் இறக்கி வைத்து
பொங்கியெழு சூரியனின்  பொன்வெள்ளி கதிராகு
புன்மைகளை எரிக்கவென்று
மங்குமொளி மாலைசுகம் மந்த மாருதம் வீசி
மயக்கியது போதும் தமிழே
பங்குஎடு கொண்டதனை வென்றதிவன் இன்றுஎன
பாடுதோள் வாகை சூடு!

வென்றுவிட நீ நடக்கும்  பாதைகளில் எங்கணுமே
வீரமழை தூறல்வேண்டும்
தென்றல் புயலாகிவிடத் திடுதிடென் றதிர்ந்து மலை
தீ உமிழ்ந் தாடவேண்டும்
நின்ற இடம் ஓளிதோன்றி நெஞ்சினனல் பந்தாகி
நீசமதில் தீயவேண்டும்
இன்று விடு உன்விசும்பல் எழுஇடியும் வீழ இடர்
இல்லையென ஆகவேண்டும்

மந்திசில மரந்தாவ மாவிற் கிளி இருந்தாட
மயில்கள் கீழ் நடனமாட
நந்தவனத் தென்றலெழ நறுமணமு மெங்கும்வர
நங்கையர்கள் கூடிஆட
சந்திரனும் வீசஒளி சுந்தரர் கள்ளிசைபாடி
சோதிஎன வாழ்வு மோங்க
சிந்தைகளித் தின்பமென செந்தமிழர் குதிபோட
செய்தமிழே செய்தல்வேண்டும்

****************************

No comments:

Post a Comment