Wednesday, September 19, 2012

மேன்மை கொடு!


எத்தனை எத்தனை காலமதா யிந்த
   எத்தனும் சித்த முருகி யுனைப்
பத்தியுடன் கரம் கூப்பிநின்றேன் என்னில்
   பாசமும் கொள்ள மறுப்பதென்ன?
நித்தமும் உன்னடிபோற்றி யிவன் நிதம்
   நெஞ்சில்வைத்துப் புகழ் கூறிடினும்
சுத்தமென்னும் மனம் கொண்டிவனை வெற்றி
   சூழவென் றாக்கத்  தயக்கமென்ன ?

சித்தமெங்கு முனை யெண்ணி மகிழ்வுறச்
   சேவித்து நாவிற் புகழ்ந்துரைத்தும்
கத்தியழுது கை கும்பிடினும் உன்றன்
  காதிரண் டிலிவை கொள்வ தில்லை
புத்தி பெறப் பொருள் இன்னதென்று நீயும்
   போதனை செய்துமறி வளித்தே
உத்தமனாய் வாழச் செய்வதனால் துயர்
    ஏதுமிலாச் சுகம் ஈவதெப்போ

செத்து மடியென்று சிந்தைதனிற் கடும்
   சீற்றமுற்றே கொண்ட செய்கைதனும்
அத்தனையும் விட்டு ஆதிசக்தி யெனை
    அன்பு விழி கொண்டு கண்டுவிடு
பித்துப் பிடித்தவ னாகியுனைத் தினம்
    போற்றி மனம் கொண்டு வாழ்த்துகிறேன்
வைத்து மன்புகொண்டு வாழ்வினிலே மேன்மை
   வையகத்தில் கொள்ளச் செய்வதெப்போ

மத்தினைக் கொண்டு கடைவதன்ன உயர்
   மாபெருஞ் சக்தி மனங் கடைந்து
சித்திகொள் ளும்வரை சுற்றிநின்றே இன்பஞ்
    சேர்த்துவிடு  புகழ் செய்துவிடு
உத்தியதைத் தர வேண்டுகிறே னுள்ளே
   ஊதி எரிந்திடும் செந்தணலை
மெத்த சுடும் வகை செய்வதென்ன வலி
  மீதமெனக் கொள்ள மோகமென்ன

முத்தை மணிப் பலஇரத்தினங்கள் தமை
   மோசம் என்றே மண்ணில் வீசலென்ன
சொத்தைப் பணங் காசு பொற்குடத்தை நீயும்,
   சொத்தையெனக்  குப்பை போட்டதென்ன
எத்தகை வன்மனங் கொண்டதினால் கையை
   எத்தி எறிந்திடும் நீர்துளியாய்
புத்தம்புது வாழ்வு வேண்டுவனை உள்ளம்
    பேதலித்தே விழச் செய்வதென்ன

வித்தையது ஒன்று கண்டுவிட்டேன் உனை
    வேண்டி மனம் கொண்டு பூசிப்பதாய்
சத்தியமும் கொண்டு செந்தமிழில் பல
   சந்தமுடன்கவி செய்தளித்து
நித்தியமும் கலை போற்றித் தமிழ்ச் சுவை
    நெஞ்சில் எழத் தந்து தேன்தமிழால்
எத்திசையில் விழிகண்டினும் நின்னை
  என்திசையில் விழி கொள்ளவைப்பேன்

No comments:

Post a Comment