Wednesday, September 19, 2012

சக்தி தந்தாள்

தேனைகுழைத்தவள் தின்னுஎன்றாள் - எனைத்
 தேடிமது உண்ணு பூவிதென்றாள்
வானில் குழைத்து நல் வண்ணமிட்டாள் - இந்த
  வாழ்வில் களித்திட எண்ண மிட்டாள்
நானிக்கவி செய்தேன் என்றெழுதி - இவன்
  நாளும் புழுகிடும் வேளையெல்லாம்
வானிற் கிடந்து சிரித்திடுவாள் - அவள்
  வாழ்த்தித் தமிழ்செய்து வண்ணமிட்டேன்

மானைத் துள்ளு என மாயமிட்டாள் - அந்த
   மாலைக் கிறக்கத்தில் மையலிட்டாள்
வானின் கிழக்கிடை செம்மையிட்டாள் - காலை
  வந்து உதித்திட வெய்யில் செய்தாள்
ஊனைப் படைத்தென்னில் வாழ்வளித்தாள் - இந்த
  உள்ளமதில்  தமிழ் ஊற விட்டாள்
ஏனோ எனைக் கவி சொல்லவிட்டாள் - தமிழ்
 ஓடும் உதிரத்தில் தூவி விட்டாள்

நானெனும் போதினில் நானுமில்லை - ஒரு
 நல்ல கவிசொல்ல ஞானைமில்லை
தேனும் வழிக்கின்ற பூவிதழின் - வாசம்
  தென்றல் கொள்ளுமது சொந்தமில்லை
வீணில் வீம்பு  கொள்ளும் நெஞ்சமில்லை - இவன்
  வேண்டி அழுதிடும் தெய்வம் தன்னை
காணில் உயிர்தன்னை காலில் வைத்து - நானும்
   காணும் ஒளியுடன் கூடிடுவேன்

No comments:

Post a Comment