Wednesday, September 26, 2012

அன்னிய மண்

ஏரிக் கரையுலவும் இங்கிலீசுக் காற்றினிலே
ஏபீசீப் பாட்டுக் கேட்குது
வேரில் நிமிர்ந்தமரம் வெள்ளை நிறப் பஞ்சுகளை
வீசிவருங் காற்றில் தள்ளுது
மாரிமழை உறைந்து மல்லிகைப்பூ போற்பனியை
மண்,மரத்தில் கொட்டக்காணுது
வாரி இறைத்தபனி வந்ததோ பா லாறு வென
வழிமுழுதும் வெண்மை கொள்ளுது

நீரில்மிதந்த கயல் நீலவிழி போற்துடித்து
நீந்தும் பனிக் குள்நடுங்குது
சேரில் சிறந்ததெனச் சின்னஞ்சிறு புள்ளினங்கள்
செல்லமாகக் கொஞ்சிப்பேசுது
ஊரிமணற் கரையில் ஓங்கியெழும் ஆழியலை
ஓவென் றெழுந்  துள்ளிவீழுது
பாரில் வளங்கொழித்த பாடெனவே வாழ்விருந்தும்
பறிகொடுத்த துயரெடுக்குது

ஊரில்சிரிக்கும் நிலா ஓடும்முகில் பின்னிருந்தே
எட்டிப்பார்த்து நாணங் கொண்டது
நேரில்தெரியுதொன்று நின்றவளின் தங்கையிதோ
நாணம்விட்டு வானில்காயுது
மேரி, சோ சாரி யென மாரிகால ஈசல்களாய்
மனிதஇனம் முணுமுணுக்குது
தூரில்ஒர் பாம்பிருந்து சீறியதாய் செல்லுமிடம்
தஸ்ப்புஷ் சென்ற பேச்சுகேட்குது

வாரியடித்த கொடும் வெய்யில் பட்ட தால்வயலில்
வைக்கோல் சுட்டுப் பியர்மணக்குது
கூரில் உயர்ந்த பெருஞ் சிலுவையினை சுமந்ததிருக்
கோவில்மணிஒசை கேட்குது
தேரின் அசைவுமிலைத் தென்றலிலைத் திங்களிலைத்
தேவதைகள் ஆடிச் செல்லுது
ஊரின் வயற்கரையில் ஓடிநடை கொண்டவளை
உள்ளமெண்ணி ஒத்துப்பார்க்குது

தோலைஉரித்ததெனத்  தோன்றுவரின் முன்னிலையில்
தேகம்சற்றுக் கூனிநிற்குது
ஆலை பெருந்தோட்ட வேலைஉழைத் துண்டிருந்தும்
அவமான உணர்வெடுக்குது
சாலை தெருக்களிலும் பந்தடிக்கும்,பிள்ளைகளும்
சரளமாயிங் லீசுபேசுது
நாலை நடந்துமிந்த நானிலத்தில் கற்றுவந்தும்
நாமொழியைக் விட்டுத்தள்ளுது

காலை விடிந்தவுடன் கண்நிறைந்த கதிரெழுந்தும்
காணுமிந்த வாழ்விருண்டது
சோலைமலர் பொலிந்தும் சுந்தரமென் வாசமில்லை
செண்டின் மணம் முந்தி வீசுது
காலை மிதித்து நடை ,கன்னித்தமிழ் சொல்லுரைத்துக்
கர்வத்தோடு நின்றமண்ணது
மூலை மடங்கியொரு மூச்சுவிட இன்னலுற்றே
மேதினியில் வாழும்வாழ்விது

1 comment:

  1. வித்தியாசமான சிந்தனை வரிகள்.....

    நன்றி...

    ReplyDelete