Thursday, September 20, 2012

ஒன்றோடு ஒன்று !


கூட்டுக்குள்ளே வைத்துபூட்டி வளர்த்தனன் 
சிட்டுகுருவிஒன்று - தன்
பாட்டில் பறக்குது கூட்டைவிட்டு வானம்
பார்த்திடக் கண்மறைந்து
ஏட்டில் எழுதிப் படித்தறிந்தேன் அன்பு
இன்பத்தை ஊற்றுமென்று - அது
வாட்டி வதைத்திடும் என்றறிந்தேன் உள்ள
வண்ணமிழந்து இன்று

கோட்டைக் கிழித்தொரு சொல்லுரைத்தேன் அன்பு
கட்டியுள் வைக்குமென்று  - அது
போட்டிவைத் தேனென்று புன்னகைத்தே வானில்
போகுதெனை மறந்து
காட்டினுள் வாழ்ந்திடக் கற்கவில்லை யது
காணுமோ துன்பமென்று -மனம்
வாட்டிவதைத்திட நோக்குகின்றேன் எண்ணம்
வார்த்த அனல்குளித்து

நாட்டினிலே நூறு செய்தி சொல்வர் அதை
நானும் நினத்துழன்றேன் - அயற்
காட்டினிலே கள்ளர் காத்திருப்பர் வலை
கண்ணை மறைத்து வைத்து
மேட்டினிலே மழை மின்னல்வரும் அதில்
மேனி துடிக்கும் என்றார் - ஒரு
சீட்டில் எழுதியத் தெய்வத்தின் முன்றலில்
சாத்திரம் பார்க்கச்சொன்னார்

வாட்டமுடன் நானும் வட்ட விளக்கேற்றி
வார்த்தைகள் துண்டெழுதி - அங்கு
போட்டெடுத்தேன் கோவிற் தெய்வம் முன்னால்
விட்டுப்போன குருவிஎண்ணி
பாட்டினிலே வரம் கேட்டுநின்றேன் அங்கு
பக்கத்தில் ஓர்சிறுவன் -ஐய
கூட்டல்கழித்தலில் கொஞ்சம் பிழை = மனம்
கொண்ட கணக்கிதென்றான்

ஒன்றில் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றென
ஒன்றிடில் மூன்றெனவும் - மனம்
ஒன்றியென்னில் அவர் உள்ளிணைந்தால் துயர்
ஒன்றில்லை யென்பதையும்
ஒன்றுமில்லை என்று உள்ளவனை தரம்
ஒன்றென ஆக்குவதும் - வரும்
ஒன்றையும் மெண்ணா நடப்பவனை உல
கொன்றில்லை ஆக்குவதும்

ஒன்றெனதே தொழில் ஒன்றைவிட்டு ஒன்றை
தேடிடும் மானிட கேள் - நீ
ஒன்று பட்டால் உண்டுவாழ்வென உள்ளதை
ஒன்றும் நினைப்பதில்லை
கொன்று மகிழ்ந்திடும் கோலமெடுப்பதில்
ஒன்றும் குறைவுமில்லை - அவன்
ஒன்றுதனும் துயர் இல்லையெனில் விதி
ஒன்றை நினைப்பதில்லை

வந்த குரல்களின் சொந்தமுகமெண்ணி
வார்த்தைவந்தோர் திசையில் - ஏது
எந்தன் விழி கொள்ள அங்கெவருமில்லை
என்ன அதிசயமோ?
சொந்தநிலை யெண்ணித் துண்டிலொன்றைக் கையும்
சுற்றி வளைத்தெடுக்க - அதில்
வந்ததென்ன ’ஒன்றில் ஒன்றியிரு’ எனும்
வார்த்தை கண்டே சிலிர்த்தேன்

No comments:

Post a Comment