Thursday, September 20, 2012

புதிர்க் கவிதை


பரவும்காற்றில் சுனையொன்றருகே
பாதம் பதிய நடை கொண்டேன்
வரவை அறியா தவளை ஒன்றும்
வடிவில் மலராய் கண்டே “பார்
அருகும்வாழ்வில் அழகின்பக்கம்
அறியாதெல்லாம் முன்வைத்து
திருவெண்முகமோ திங்கள் ஆகத்
தோன்றக் கண்டேன் திருமகளே!”

மதியோ விதியோ மலரோ அறியேன்
மனமும் வாடிக் காண்கிறேன்
மதியும் சுடருமொன்றானால் பின்
மறையும் ஒளியும் இருளென்றாள்
மதியும் சோராதிருப்பாய் பெண்ணே
மாற்றம் கொள்ளக் கேட்கின்றேன்
புதிரின் விடையைக்கூறு உன்னைப்
புதிதாய் ஆக்கி வைக்கின்றேன்

இரவியின் ஒளியில் தருவில் இருளாய்
இருந்தே கரையும் பொருளைக்காண்
உருகும் பனியின் நிறமும்கொண்டோர்
உறவுக் கெதிராம் வண்ணத்தாள்
கருதும்சொல்லில் ’காதால்’ கொள்மின்
கடிதோர் துயரை இவன்கொண்டான்
புரிந்தே துன்பம் போகசெய்தால்
புவியில் பெரிதாய் புகழ் சொல்வேன்

திறமை கொண்டாள் திரும்பிக்கண்டு
தெய்வக் கோவிற் சிலையென்றே
வருமோர் மாதம்நாளும் ஒன்றாம்
வந்தால் மறுநாள் தன்னில்கொள்
இருந்தோர் நகையை என்மேல்வீசி
இதனைக்கொள்வீர் நீர் என்றாள்
சரியாய் விடையும் பகர்ந்தாள் அவளை
சிறிதே புகழ்ந்து பார்பெண்ணே

பழமைப் புகழ்கொள் மூவர் முதல்வன்
பெயரில் சிறியோன் பெரியவனாம்
சுழலும்புவியில் ஒருதரம் சொன்னால்
சுவையாய் உண்ணப் பொருளீவான்
பழகும் வகையில் இருமுறை சொன்னால்
இனிதாய் வாழ்வுக் குயிர் தருவான்
அழகும் மெய்யை பின்னவன் சேர்த்தான்
அதிலே முன்னோன் மெய்யழித்தான்

ஆவின் கன்று அவனை அறியும்
ஆனால் பதிலும் அதுவல்ல
தாவென் றேதும்கேளா தருவான்
தருமோர் பதிலும் அதுவென்றேன்
நாவின் நுனியில் விடையைக்கொண்டேன்
நவின்றால் பயனென் நவிலென்றாள்
பூவின் தோழன் பிரித்தே கொள்ளும்
பொருளைத்தருவேன் நானென்றேன்

தாவரம் நீரில் வளரும் இவளோ
தனியே கண்ணீர் மரமாமோ
பூவரசம் பூப்போன்றே மெதுவாய்ப்
புன்னகை பூக்கக்கண்டேநான்
தாவரமென்று கேட்டால் நானும்
தர மாட்டேனோ ஏனென்றேன்
பாவின் புதிரை நீயும் சொல்லு
பார்ப்போம் எழிலார் பெண்ணென்றேன்

வேங்கை யன்ன வீரம்கொண்டும்
வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
அதையும் கொள்ளும் திருவுருவே
மதியென் றெந்தன் வதனம்கண்டீர்
மாவின் கனிபோல் கன்னங்கள்
அதிலேகாணும் இனிமை கொள்வீர்
என்னைத் தந்தேன் கொள் என்றாள்

விளைந்தாய் அழகாய் வளர்ந்தாயன்றி
வலிந்தாய் மனமும் பொலிந்தாயில்
விளைவாய் என்னக் கலந்தாய் அன்பில்
குழைந்தாய் இனிமேல் குழந்தாய் என்
எழுந்தே வானில்  இரவியும்காண
பொழுதே விடிந்துபோம் நாளில்
குளத்தின் நீரில் நாலில் ஒன்றைக்
கொண்டாள் கன்னி அஞ்சும்மான்

ஆறும் குணமும் இன்றிக் கடலில்
அலையில் கயலைக் காண்பேனாம்
மாறிக் கயலில் கடலைக் கண்டேன்
மாதே இசைந்தேன் மனதில் கொள்
எட்டும் விழியின் இறைநீர் குன்ற
தட்டும் கொண்டு வருவோம் காண்
தாவென் றுன்னை அன்னை கேட்பாள்
சரியா என்றேன் மலர்ந்திட்டாள்


********************

No comments:

Post a Comment