Saturday, September 15, 2012

எரித்தாயோ

நிலையழிந்து குலமழிந்து நெஞ்சம்தீய்ந்து
நில்லென்று விட்டதென் நிமலா இன்னும்
கலையழிந்து கல்வியொடு கனவும்தேய
கருணையினைக் காட்டாது நின்றதேனோ
குலையழிந்து வாழைகளின் கூட்டம் வீழ்ந்து
கொள்ளென்றும் வாழையடி வாழையாக
தலையழிந்து தலைமுறையும் தனயனோடு
தங்கைகுலம் அழியவரம் தந்ததேனோ

மலை விழுந்து மரம்விழுந்து மண்ணும்போக
மதியணிபொன் மேனியரே செய்ததேனோ
இலைவிழுந்து கனிவிழுந்து இருந்த பிஞ்சும்
இல்லையெனச் செய்தனையே எதனைவிட்டாய்
உலை வைத்து அரிசியதில் வேகும்பொது
உடைத்தென்ன கலயத்தை உண்மைகூறும்
சிலையெழுந்த சேகரனே சிரிக்க வேண்டாம்
சினந்தெழ நம்நாடு திரி புரமா சொல்லாய்

வலையெறிந்து மீன்பிடிக்க வந்ததேவே
வாரிஇழுத் தெடுக்க  உடன் வந்ததென்ன
விலையுமிலா முத்தோடு வெள்ளிதங்கம்
விளை சங்கு வைரமென வேண்டுமாமோ
கொலை பழியினோடு நீ செய்ததென்ன
கொடிய மழை புயலழிவா இல்லையில்லை
தலைபிளறத் தரைதணலென் றாக்கியன்றோ
தரணியழி சங்காரத் தாண்டவம் காண்

நிலை தவறி ஓடுமிவ் வுலகினின்று
நீசெய்த தென்னவோ நிறுத்துமய்யா
குலை நடுங்க உடல்துடிக்கக் குரலும்கத்தி
கோலமதைக் கொண்டீந்து சென்றதேனோ
தலை வெடித்து சிதறென்று தந்தசாபம்
தமிழருக்கு இன்னமுண்டு தணியவில்லை
மலை மகளுக் கரை மேனி இழந்த பாகா
மர்மத்தைசொல் செய்தகுற்றமென்ன

கண்கள்தனும் பிடுங்கி நாம் களித்ததில்லை
கன்னியரை கீழ்மைகொண் டழித்தைல்லை
பெண்கெடுத்தும் பாவங்கள் புரிந்ததில்லை
பிறன்மனையைச் சீரழித்து மகிழ்ந்ததில்லை
கண்மணிகள் கடுந்துன்பம் கொள்ளவென்று
கரம்கொண்ட சாட்டையால் முதுகுவீங்க
எண்ணியடி தரவில்லை ஏன் இறைவா
இத்தனையும் எம்மிடத்தில் நடப்பதேனோ

விண்ணிருந்து செய்வதென்ன வினைகள்தானோ
வெள்ளைமனம் கொல்லும்செயல் வீணேயேனோ
எண்ணமதில் கொண்டதென்ன இன்னுமெங்கள்
இருள்சூழும் வாழ்வுக்கு மன்னிப்பில்லை
தண்ணிலவில் தீகொட்டித் தகிக்கவைத்தாய்
தலைமாறிச் சூரியனைத் தணிய வைத்தாய்
வெண்ணையிலே நஞ்செழுந்த விருந்தும் கண்டு
விமலா என்விழி மூன்றும் மூடிக்கொண்டாய்?
 

1 comment: