Tuesday, September 25, 2012

கண்ணிழந்தோம் காத்திருப்போம்

காணக் கண்ணிழந்தோம் காலிழந்தோம் கையிழந்தோம்
நாணச் சொல்லிழந்தோம் நாடிழந்தோம் நல்லவரைப்
பேணப் பலமிழந்தோம் பேசுமொரு துணிவிழந்தோம்
கோணல் நிலை கொண்டோம் கொண்டவிதி எதனாலே?

வாழக் கதியிழந்தோம் வாழும் மனை வீடிழந்தோம்
கூழைக் குடித்த பசி கொண்டபாய் துயில் விட்டோம்
தாழக் குழிவிழுந்தோம் தலமுடியும் தரமிழந்தோம்
பாழுங் கிணற்றுள்ளே பாய்ந்தவராய்  பார்த்தழுதோம்

ஆடக் காலிழந்தோம் ஆறோடும்விழி சொரிந்தோம்
தேடத் துணிவிழந்தோம் தேடிவழி நாம்தொலைந்தோம்
பாடப் பொருளிழந்தோம் பாடுங்குரல் கெட்டழுதோம்
மாடப் பெருமனைகள் மாசபைகள் தாமிழந்தோம்

ஓடி நிலம் வீழ்ந்தோம்  உயர்விழந்தோம் உரிமையுடன்
வாடிகலங்குஎன வாய்த்த சுகம் வனப்பிழந்தோம்
நாடி யெம்கரம்நீட்ட நாடேதும் காக்குமென்று
வாடிக்கருகி விழி வழிபார்த்து வாழ்விழந்தோம்

ஓடிப் பிரிந்தழுதோம் உற்றவர்கள் உடலெரித்தோம்
பாடிப் பழக்கியநற் பண்புடையோர் பற்றிழந்தோம்
தேடித் திரட்டியதோர் செல்வமெலாம் தொலைத்துவிழி
மூடித் துயில்வதற்கும்  மீறி நிலை கெட்டழுதோம்

ஆணைப் பலர்இழந்தோம் அண்டியவர் துணையிழந்தோம்
வீணை குரலிழந்தோம் வெய்யில்பட்ட  புழுவாகி
தூணைப் பெருந் தமிழின்  சுகத்தை இழந்தும் நாம்
ஆணையிடும் விதியின் அன்புக்காய் காத்திருந்தோம்


1 comment: