Saturday, September 29, 2012

அறம் சொல்ல வருவீர்!

முல்லைக் கொடிவாழத் தேர்கொடுத்த மன்னா
மீண்டும் பிறந்து வந்தே - இங்கே
கல்லில் கடிதாம் மனங்களுண்டு மென்மை
கற்றுத் தெளிய வைப்பீர் -நல்ல
சொல்லைப் புறந்தள்ளிப் பொய்யுரைத்துப் பல
செய்கையில் வஞ்சங்கொண்டும் - இங்கே
அல்லுற வைத்து ஆள்பவர்க்கோர் என்ன
அன்பென் றுணர்த்திடுவீர்

நெல்வளர் நீர்கொள்ளு நீள்வரம்போங்கியே
நல்வளம் கொள்ளுமென்றே -சிறு
சொல்லில் குடிவாழக் கோமகன் வாழுவன்
கொள்ளென்ற ஔவைப்பாட்டி - இங்கு
நல்ல அறநெறி குன்றியது வந்து
நாடு நலம் பெறவும் - சொல்லில்
அல்லுற மக்கள் ஆளும் மன்னர்தம்மின்
ஆசைக்கு எல்லையிடு

எல்லை மணியடித் தென்மகன் கொன்றனை 
ஏந்தலே என்றழுது - ஒரு
நல்லபசுக் கொண்ட வேதனையை கொண்டு
நீதி வகுத்தவரே -இங்கே
எல்லை யில்லாதுயிர் கொல்வது வேலையென்
றெத்தனை பேர்களுள்ளார் - இவர்
புல்லையுண்ணும் பசு அல்ல மனிதர்கள்
புத்தி உரைத்துவிடும்

நெல்லிக்கனிகொண்டு நீடுவாழவென
நல்வழி கொன்றைவேந்தன் -இவை
சொல்லிய பாட்டியாம் ஔவையிடம் தந்து
செந்தமிழ் வாழவைத்தார் - இந்த
வல்ல அதியமான் கொண்ட தமிழன்பை
வாருக்கள் தீங்கிழைப்போர்  - அவர்
நல்ல தமிழ்மீது அன்புகொள்ளக் காட்டி
நானிலம் மாற்றிடுவோம்

தொல்லை யிழைப்பவர் தொன்மைத் தமிழினைத்
தூய தெங்கள் வளத்தை - அது
இல்லையென தாக்கி முற்று மழித்திடும்
இற்றைப் பொழுதினிலே - வளர்
நெல்லுக் கிடையினில் நீசக் களைகளை
நின்று விளைத்திடுவோர் - தமை
இல்லை என்றாக்குவோம் எம்வழிகாட்டிய
அன்புடைத் தெய்வங்களே

வல்லதிறம் கொண்டீர் வாழ்வின் புன்மைகளை
வானின் றழித்திடுங்கள் - மன
அல்லதெனும் எண்ணம், கொள்கை யுடையோரை
அன்பு வழிக்கெடுங்கள்
சொல்லிக் கொடுங்கள் தெரிந்திடுவர் விட்டுத்
தன்சுகந் தான் பெரிதாய் - உள்ள
கல்லின் மனங்கொண்ட இவ்வுலகோரன்பு
காண ஒளிகொடுங்கள்!

3 comments:

  1. சிறப்பான வரிகள் மனதை கவர்ந்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்கள் பொன்னான மனதுக்கு என்றும் என் நன்றிகள்!!

    ReplyDelete
  3. நல்ல கவிதை படைப்பு... அருமை

    இது என் முதல் வருகை உங்களையும் என் தளத்திற்கு அன்புடன் இனிதே வரவேற்கிறேன்..

    ReplyDelete