Saturday, September 15, 2012

நான் இல்லைஅவள்

சலங்கையொலி நாதமெழும்
...சலசலென ஓசையிடும்
...சத்தமெழக் கால்கள் துள்ளிடும்
இலங்குமொரு திங்களொளி
...இரவிலெழில் போதைதரும்
...இரவல் தரச் சுடர் இருந்திடும்
நலங்கொழித்து மேனியதும்
...நகையணியும் மெருகுறவும்
...நடை பழக உயிர் நயந்திடும்
துலங்குகவி மாலைகளும்
...தோரணங்கள் ஆகுமெழில்
...தேவியவள் அருளேயன்றோ

குலம் செழித்து வளருமதில்
...குழந்தைகளின் சலசலப்பு
...கொடுத்ததெது தாயவள் உதரம்
நிலம்கொழித்தவயல்நிறைந்து
...நிற்கும்கதிர் தலைகுனிந்து
...நிலையேது வரம்பதனாலும்
பலம்மெடுத்து படைநடத்தி
...பகை யழித்த அரசன்புகழ்
...பாதை கண்ட வீரன் பங்கே
புலம்புதமிழ் பொலியுதெனில்
...புகழ்மலர்கள் சொரியுதெனில்
...பூஜை அவள் திருவடிக்கன்றோ

சிலசமயம் ஒளி இலங்க
...சிலசமயம்புயல் முழங்க
...சிலசமயம் மதி மயங்கிடும்
உலகமெனும் கோள்சுழலும் 
...உதயமொடு மாலைவரும்
...உவகையொடு உள்ளம் துள்ளிடும்
கலகம்வரும் காட்சிகளில்
...கனவும்வரும் களிப்புமெழும்
...காலமது வானவில்லெனும்
வலமுளது இடதுஎனும்
...வழமை விதி மாற்றமிடும்
...வாழ்வதவள் விதிவகுத்ததே!

அலைகளெழும் மனதுகொளும்
...அழகுணர்வு மழைபொழியும்
...அதில் நனையும் வேளைஇன்பமே!
கலையொளியும் மதுமதியும்
...கருமிருளில் வரும் பொழுதும்
...கனவுகளில் மகிழ்வு கொள்ளுமே
தலைவி யவள்:தருவதிலே
...தளிரெழுமோர் தருவளரும்
...தர்மமெனத் தகுதி உயரினும்
விலையிலதோர் பொருளெனவும்
...வேண்டியுளம் கொள்பெருமை
.. விளைத்தவளே முழுதுமல்லவோ
******************

No comments:

Post a Comment