Wednesday, September 19, 2012

பிரபஞ்சப் பயணம்


கலைவான முகிலேறிக்
. காற்றூதும் வெளிதாவக்
. கனவுரதம் ஒன்றுதா தேவி !
நிலையற்ற புவிநின்று
. நீலவான்வெளி செல்லும்
. நெடும்பயணம் கொள்ளவும் செய்நீ !
தொலைவானில் வண்ணமெழும்
. தீப்புயலின் சூடுதனில்
. தொட்டபடி தூர விழுந்தேகும்
இலையென்வி நோதமெழும்
. இன்பங்கள் அதிசயங்கள்
. எழில்காணும் ஓருலா வேண்டும்

ஒரு பயணம் புதுமைபெற
. ஒருகோடி ஒளியாண்டு
. ஓடித் தனி உலகொன்று கண்டே
பெருமகிழ்வு பொலியவதில்
. பிறப்பிறப்பு இல்லாத
. பெருமைகொளும் நிலைகாண வேண்டும்.
கருவானில் எழுமதியும்
. காணுமொளி போல்வானக்
. குளுமையுடன் சூரியன்கள் வேண்டும்
பெருமலர்கள் ஆளுயரம்
. பொலியுதெனப் பூப்பூத்து
. புதுஅருவி தேன்வழிய வேண்டும்

மலர்களொளி வீச அதில்
. மத்தாப்பின் வண்ணவகை
. மணித்துகள்க ளாய்த் தெறிக்க வேண்டும்
கலகமின்றிக் கனிமொழியக்
. காணுருவம் ஒளியெனவும்
. கதைபேசிக் குலவும் வகைவேண்டும்
சில நதிகள் வாசமெழச்
. சென்றதனில் மூழ்கியுடல்
. சிலுசிலென குளுமைகொள வேண்டும்
தொலைவில்விண் மீதுபறந்
. துலவியெரி தீயருகில்
. தொட்டவிதமாய் திரும்பவேண்டும்

தெருவெங்கும் சிறுரதங்கள்
. திருமகளி னழகுடனும்
. திகழுமெழிற் தேவதைஉட் செல்ல
வருமிளைய தென்றலதில்
. வண்ணநிறப் புகையெழுந்து
. விழிகளின்முன் விளையாடவேண்டும்
பருகிடவெண்மலர்த் தேனும்
. பாவெழுதும் போதைதனும்
. பெருகுஎன கவிநூறு தந்து
உருகி மனம் வழிந்தோட
. உணர்வுதனில் தீபரவ
. உயிர்கள்மகிழ் வடையுந்தமிழ் வேண்டும்

நெளிவுகளும், வளைவுகளும்
. நீரோடை மலைகளென
. நீந்திவிண் வெளிகாண வேண்டும்
பொழியமுதத் தூறலென
. புதுவிளக்கினொளி வெள்ளம்
. புகுந்தேகும் விளையாட்டு வேண்டும்
மொழியெதுவும் பிறிதின்றி
. மதுவென்சுவைத் தமிழுடனே
. மனிதரெனும் பதுமைகளின் உலகம்
ஒளியழகுத் திருநாடும்
. உணர்வதனில் திறனோடும்
. ஒருமையுட னாயிருக்க வேண்டும்

கருவயலில் உறைகுளிரில்
. கண்கவரும் தோரணங்கள்
. காணுமொரு எழிற்கோலம் வேண்டும்
பெருகும் செறிகயமையுடன்
. நெறிதவறும் நிகழ்வுமின்றிப்
. பசுமையுணர் வானநிலை வேண்டும்
உருகி மனம் வழிந்தோட
. உயரிசையில் நடமாடும்
. உருவங்கள் உலவிவரவேண்டும்
தருணமதில் காற்றோடு
. தலைநிமிரப் படபடத்து
. தமிழன்கொடி உயர்பறக்கவேண்டும்

நீலமலை உயர்ந்தநெடு
. முச்சிதனில் நின்றண்டம்
. நிலைமைதனைப் பார்வையிட வேண்டும்
கோலமிடு வாசலெனக்
. கோளங்களும் சுற்றுமெழில்
. குழிவானை விழிகாண வேண்டும்
வாலெரியும் நட்சத்திரம்
. வளர்பிறையும் ஒளிவீச்சும்
. வடிவுற்ற அசைவும் விழிகாண
காலம்சில நாள்களென
. காணுமெழில் மனமகிழ்ந்து
. காயும் இந்த பூமிவரவேண்டும்

No comments:

Post a Comment