Tuesday, September 18, 2012

நான் காண வேண்டும்..!

கலைவான முகிலோடிக்
.  காற்றூதும் வெளிதாண்டிக்
.  கடந்து நான் பறந்திடவேண்டும்
வலைபோலும் விளைந்தாடும்
.  வானத்துச் சோதிக்குள்
.  வகையென்ன புரிந்தாக வேண்டும்
நிலையான தவையேது
.  நிலையற்ற பொருளேது
.  நிகழ்வான நான்காண வேண்டும்
தொலைவான மதிகண்டு
.  தூரத்துச் சுடர்தாண்டித்
.  தொலந்தின்னும் முடிவேக வேண்டும்

குலைந்தோடும் அனல்வாகு
.  குளிர்ந்துபின் புவிபோலும்
.  குடம்செய்யும் தொழில்தானும் கல்லில்
சிலைசெய்யும் கலைஞானி
.  செயலொத்த தொழில்தன்னை
.  செயும்சக்தி திறன்காண வேண்டும்
அலைந்தெங்கும் புதிர்கண்டு
.  அதன்பயன் அறிந்தங்கு
.  எழில்கொண்ட வானத்தில் நின்றே
உலைகொண்ட தீயோடு
.  உருவஞ்செய் பிரம்மனின்
.  உயர்சக்தி எவைகாண வேண்டும்

அலைமீது விழிதூங்கும்
.  அருஞ்செல்வம் தருமன்னை
.  அவள்கொண்ட மணவாளன் காணும்
நிலையென்ன காப்பவன்
.  எதையிங்கு காத்தனன்
.  நலம்கண்டு நான் கொள்ள வேண்டும்
தலைகொய்தே உயிர்வாங்கி
.  தருமத்தின் தேவனாம்
.  எமனுக்கு இடம்காட்டும் தேவன்
விலைகொண்ட உயிருக்கு
.  வகையுண்டோ வாழ்வுக்கு
.  வழியென்ன என வார்த்தை கேட்டும்

ஒலிவானில் ’ஓம்’மெனும்
.  ஓங்கார இசையோடு
.  உருண்டிடும் கோளங்கள்மீது
கிலிகொள்ளும் வெடியென்ன
.  கிளம்பிடும் புகையென்ன
.  கிழக்கென்ன மேற்கென்ன கண்டும்
வலிகொண்டு இழுத்தோடும்
.  வகையென்ன காந்தங்கள்
.  வரிசைக்கு வைத்தென்ன சக்தி
மலிவென்று இத்தனை
.  மாபெரும் அண்டத்தில்
.  மனம்கொண்டு இயல் செய்ததெல்லாம்

குலைந்திடா வண்ணமோர்
.  குறையின்றிச் செய்துமிக்
.  கோளமாம் புவிதன்னை மட்டும்
இலையொன்றும் விதியென
.  இவரெண்ணி அவரெண்ணி
.  இட்டதே சட்டமென்றாக்கி
புலைஉண்டு  பெண்தொட்டு
.  புலன்கெட்டுப் பகைகொண்டு
.  பித்தனென்றாடி அழிக்கும்
நிலைகொள்ள விட்டவள்
.  நிம்மதிகண்டதென்
.  நினைவென்ன நான் காணவேண்டும்

1 comment:

  1. வரிகள் அழகு...

    எல்லாமுமே நடக்க வேண்டும்...

    ReplyDelete