Friday, April 1, 2011

கனிந்துவிடக் கனவு கண்டேன்


நள்ளிரவுநேரம் நான் தூங்கும்வேளை
நல்லதோர் கனவொன்று கண்டேன்
துள்ளிவரும் ஓடை நீரலைகளோடு
தூயதொரு தேசமும் கண்டேன்
வெள்ளியொடு வானில் விளையாடுமேகம்
வெண்ணிலவைக் கண்மறைத்துஓட
அள்ளி மலர்வாசம் அணைகின்ற தென்றல்
அதனோடு சுகம் கண்டு நின்றேன்
 

தெள்ளமுது உண்ணத் தேனிலவைக் கண்டு
தாவென்று கைநீட்டும் பிள்ளை
வெள்ளிமதி நீரில் வீழ்ந்ததென ஓடை
விரல் காட்டி அமுதூட்டும் அன்னை
கொள்ளிஎன ஒளிரும் குறுகுறுத்த விழிகள்
கொண்டசில நங்கையரும் கண்டேன்
எள்ளளவும் அச்சம் இல்லாத பெண்கள்
இள நகைத்துத் தமிழ்பேசக் கேட்டேன்
 
மல்லிகையின் வாசம் மனங்கிறங்கும் நேரம்
மனைகூடி மாதர் துணையோடு
அல்லிமலர் பொய்கை அதனோரம் நின்று
ஆடவரும் கூடிமகிழ்வாகி
துல்லிய வெண்ணொளியில் தூயமனங்காணும்
துயரற்ற வாழ்விருக்கக் கண்டேன்
நல்லிதயங் கொண்டு நல்லவர்கள் வாழ
நாடு மலர்ந்தான விதம் கண்டேன்
 
வல்லபடை யில்லை வாகனங்களில்லை
வார்த்தைகளில் செந்தமிழேயன்றி
கொல்லுமொழி இல்லை கூக்குரல்கள் இல்லை
குறைஉயிரின் மரணஒலி இல்லை
சொல்லரிய துன்பம் தருகின்ற ஓசை
சுற்றியேஇடி வீழும் சத்தம்
மெல்ல உயிர் கொல்லும் மனங்கொண்டபீதி
மற்றுமிவை சற்றேனு மில்லை
 
சந்தணமும் பூவும் சேர்ந்த நறுவாசம்
சுந்தரமென் காற்றோடு வீச
முந்திவிழுந் தெங்கோ முடிகோதும் பெண்கள்
மூட்டியநல் அகில்வாசம் மோந்தேன்
சந்திகளில் ஆண்கள் சலசலத்துஓடி
சதிரோடு வலிகொண்டுமோதி
எந்த உடல்வலிது என்று கைநீட்டி
இளமையின் களிப்பாடக் கண்டேன்
 
பந்தங்களில் தீயும் பக்கமெங்கும் ஒளிரப்
பலகோடி வண்டுகளைப் போல
அந்திதனில் கூடும் அங்காடிமக்கள்
அவர்பேசும் ரீங்காரம் கேட்டேன்
செந்தமிழில்பாடிச் சிறுமியொரு நடனம்
செய்கின்ற எழில்வந்து மேவ
ஐந்தாறு பேதை அவளோடுசேர்ந்து
ஆடலிடும் மயில்நடமும் கண்டேன்
 
(அவள் பாடி ஆடுகிறாள்)
 
வெற்றிவந்து சேர்ந்த தெங்கள் வீரநாட்டிலே -விடி
வெள்ளியும் எழுந்த தெங்கள் ஈழவானிலே
சுற்றிநின்ற சிங்க ளங்கள் சோர்ந்து போனதே -மீண்டும்
சூரியன் கிழக் கெழுந்து சோதியானதே
பற்றிநின்ற பகையும்போ யெம் பாவம்தீர்ந்ததே -நானும்
பாடிஆட வென்று நல்ல வாழ்வு வந்ததே
குற்றமற்ற மாந்தர் கொன்ற காலம் போனதே -ஈழ
கொள்கைவென்று வாழ்வு மீண்டும் கூடிவந்ததே
 
வற்றிபோன வாழ்வி லேவ சந்தம்வீசுதே -நாமும்
வைத்தஇலட் சியங்கள் கொள்சு தந்திரத்தையே
பற்றினோம்ப டைகள் வென்று பாகம் கொண்டோமே -எங்கள்
பாசஅன்னை ஈழம்கொண்ட பாடு யாவுமே
அற்று மீண்டும் அன்பு கொள்ளும் தேசமானதே -இன்ப
அலையும்மேவி மகிழ்விலாடும் அழகுநாளிதே
விற்றுவிட்ட தானஎங்கள் வேதனைகளே -அந்த
வீணர்சிங்க ளத்தர் வாங்கி வைத்தார் பாவமே!
 
(திடுக்குறவைத்தது ஒரு சத்தம்)
 
தட்டிக் குலுக்கிடச் சட்டென ஓசையும்
வெட்டி முழக்கிடக் கேட்டேன்
பட்டென நாலு மனிதர் துரத்திட
பக்கம் வளைந்துமே ஓடி
வட்ட மடித்தொரு வாலிபன் ஓடிட
வந்து பிடித்தனர் சுற்றி
தொட்டு நிறுத்திய வீரர் அவனிடம்
சொல்லுநீ யாரெனக் கேட்டார்
 
வல்லமை கொண்ட அவ் வாலிபனோதன்
வாய்தனில் புன்னகை கொண்டு
சொல்லிக் கொடுத்தவன் என்றெனைச் சொல்லுவர்
சுற்றிய நீரறிவீரே
கொல்ல வெனத்தனும் கொண்டு செல்வீரெனில்
கொஞ்சமும் அச்ச மறியேன்
கல்லெனும் நெஞ்சமும் கொண்டவனாம்இதோ
கைகள் விலங்கிடு மென்றான்
 
சுற்றிய வீரரோ செந்தமிழீழச்
சுதந்திர நாட்டினைக் காவல்
நிற்பவர் என்றுமே கண்டே னதன்பின்னே
நேர்வதில் ஆவலும் கொண்டேன்
சற்றுத் திரும்பிய வீரர் இவனையும்
சந்தை நடுவினில் வைத்து
குற்ற மிழைத்தனன் மக்காள் ஈழமது
கொள்கையில் தண்டியு மென்றார்
 
சட்டெனவே சிலர் கூடியவனையும்
சேலை யணிந்திடச் செய்து
கட்டி நின்றதொரு குட்டிக் கழுதையில்
கயவன் ஏறிடவைத்து
விட்டனர் சுற்றியும் வாஎனக்கூறியே
வேடிக்கை செய்ததன் பின்பு
கொட்டிநகைத்துப்பின் கூட்டம் கலைந்திட
விட்டனர் போகவே வீடு
 
தென்ற லினித்தெழ தேன்மழை பெய்த்திட
தீரமெழுந் துடலெங்கும்
இன்ப மெழுந்திட என்நினைவெங்குமே
எத்தனை மங்கலபோதை
அன்பெனும் ஈழஅரசு மலர்ந்தது
அற்புதமே இனிவாழ்வில்
துன்பமதன் பெரும் எல்லையடைந்தனன்
தோன்றியவேதனை போமாம்
 
செந்தமிழீழமே எங்கணுமே
இனி சாவுகள் ஓலங்களில்லை
சுந்தரி பாவையர் கொண்ட விரோதங்கள்
கூக்குரலு மினிஇல்லை
பைந்தமிழ் வீரரெம் மைந்தர்கள் மேனியும்
செங்குருதி நதியோடும்
அந்த நிலைதனும் போனது ஆகா..!
ஆளுமை கொண்டீழம் கண்டோம்

விந்தை மனோநிலை ரம்மியமானது
மேகம்மறை யிருள்நீங்கி
வெந்து சிறைகளில் வேதனை கண்டவர்
வீடுதிரும்பின ராமே
முந்தி எழுந்திடும் புன்னகைமேவும்
முகங்க ளெதிரினில் கண்டேன்
வந்தனமும் எழ வாழியநீயென
சுந்தரகீதம் இசைத்தேன்

No comments:

Post a Comment