Saturday, April 9, 2011

சுதந்திரத் தீயை அணைக்குமோ?

நீரள்ளி ஊற்றி நெருப்பை அணைக்கலாம்
நெஞ்சின் சுதந்திர தீயை அணைக்குமோ
வேரள்ளி வெட்டி மரத்தைச் சாய்க்கலாம்
வீரரைக்கொன்று விடுதலைசாயுமோ
ஊருள்ளே தீயிட்டு உயிரோ டெரிக்கலாம்
உள்ளமெடுத்த உறுதி குலையுமோ
கூருள்ள கத்தி கொடியை அறுக்கலாம்
கொண்ட மனத்திடம் கொள்கை அறுக்குமோ

சேறள்ளிப்பூசிச் சுவரைக் கெடுக்கலாம்
சொல்லிடும் பொய்கள் சுதந்திரம் கொல்லுமோ
பூக்கிள்ளிப்போட்டு அழகைக் கெடுக்கலாம்
பொங்குதமிழ் உரம்கிள்ளிக் குறையுமோ
தேனள்ளிக் கூட்டைச் சிதைத்து அழிக்கலாம்
தீந்தமிழ்காக்கும் சிந்தனைபோகுமோ
போரள்ளி ஓரினம்பாதி புதைக்கலாம்
போய்ச்சுதே யென்றுபுற முதுகாவமோ

வீரத்துணிவு கொண்டே நீயும் வென்றிட
மார்பை நிமிர்த்தி மனத்திடம் கொள்ளடா
போரைவிட்டே யொருநீதிவழி கண்டோர்
போகும் திசையினில் காலைப்பதியடா
சாரமெடுத்தெம்மை சக்தியில்லாதாக்கி
ஊரைப்பறித்திட தூங்கிகிடப்பதோ
நேரே எழுந்தவன் நீசச்செயலினை
நீதிமுன்னே நிறுத்தி நீகேளடா

பெற்றவள், நீயும்மக னெனநிற்கையில்
பிச்சையெடுக்கவும் விட்டுக்கிடப்பதோ
நெற்றியில் பொட்டழிந்தே அவள் கண்களில்
சொட்டென நீர்வர சுற்றித்திரிவியோ
உற்றவழி ஒன்று கண்டுநீயும் அவள்
குற்றுயிர் காத்துகொள்ள வருவியோ
விட்டுஅயர்ந்து இவ்வேளைபடுத்திடில்
வீரசரித்திரம் உன்னைப் பழித்திடும்

No comments:

Post a Comment