Thursday, April 21, 2011

விபரீத ஆசைகள்...?

தென்றலுக்கு ஓசைமீது காதல்வந்தது -அது
தேடிவந்து காதில் சொல்லி ஓடிப்போனது
குன்றின்மீது ஆசை கொண்டு மேகம்வந்தது -அது
கொஞ்சி உச்சிமேனி தொட்டு நின்றுபோனது

கண்களுக்கு காட்சிமீது காதல்வந்தது -அது
காணும் யாவும் எண்ணம்கொண்டு கட்டி வைத்தது
மண்ணதற்கு மானம்மீது மோகம் வந்தது -அது
மைந்தர்மீது தன்நினைப்பைத் தூவிவிட்டது

பைந்தமிழ்க்கு பாடல்மீது ஆசைவந்தது -அது
பாடவென்று நல்லிசைத்த வார்த்தை தந்தது
ஐந்தினுக்கு ஒன்றின்மீது ஆசைவந்தது -அது
அனபுகொள்ள அஞ்சுகத்தை தேடிநின்றது

வெண்மதிக்கு பூமி மீது மோகம்வந்தது அது
வீழ்ந்து வெண் ணொளிக்கரத்தை விட்டணைத்தது
தண்ணலைக்கு வெள்ளைமண்ணில் ஆசைவந்தது -அது
தாவிவந்து கரையுருண்டு தாகம்தீர்த்தது

சிந்தனைக்கு ஞானம்மீது காதல் வந்தது -அது
செயலிழந்து மௌனமாக தவம் இருந்தது
செந்தமிழ்க்கு தென்றல் வாழ்வில் ஆசை வந்தது -அது
தேடி நல்சுதந் திரத்தைக் காண நின்றது

வெல்வதற்கு நல்மனங்கள் சேர்ந்துநின்றது -அது
வெல்லும்போது பூமிகண்டு வெலவெலத்தது
கொல்வதற்கு கைகள் யாவும் கூடிவந்தது -அது
கொள்வதற்கு நஞ்சுகொண்ட கூட்டம் வந்தது

விதியினுக்கும் பாவம்செய்ய வேகம்வந்தது -அது
வீடு எங்கும் தீயுமிட்டு வெந்தெரித்தது
கதியுமின்றி ஈழதேசம் கருகிப் போனது -அந்த
காலதேவன் கண்ணிழக்கக் கடமை தோற்றது

இருள்கிடக்க நீதிதானும் எண்ணம்கொண்டது -அது
எதுவுமற்று அமைதி கொண்டு விழிகறுத்தது
அருள்கொடுக்கும் தெய்வம்ஏனோ அமைதியானது -இந்த
அகிலம் விண்ணில் உதிரம்கொட்டச் சிவந்துபோனது.

No comments:

Post a Comment