Saturday, April 9, 2011

வீரம் தருவீரோ?

தேசம்காக்கத் தீயை உண்டு தூரப்பறந்த பறவைகளே
நேசம்கண்டு நிலமும்மீட்க நினைவைத் துறந்த வீரர்களே
வாசம் பூக்கும் மலரைபோல வாழ்வில்கருகிப் போனீரோ
பாசத்தாலே கண்ணீர்விட்டுக் பாடிக்கேட்டோம் வாருங்களே

ஊரைதின்று உயிரைத்தின்று உலகத்தட்டில் ஆடுகிறான்
நேரிற்சென்று பாசம் கொண்டோர் நெஞ்சம்போலே பேசுகிறான்
யாரைக் கேட்போம் பாரில் எந்தக் காகம் கூடஎம்துன்பம்
நேரக்காணும்நிலையைப் பார்த்து நெஞ்சம்கரையக் காணோமே

வாரிகொண்டே ஈழம்வந்து வைத்தது போலே அள்ளுகிறான்
பூரிப்போடு கந்தன் கோவில் போயோர் காவடி தூக்குகிறான்
ஆரும் அறியா துறவிச்சிலையொன் றருகில் வைத்தே மீளுகிறான்
கூரைக் கொள்வேல் குமரன்நாளை கோவில் விட்டுபோ என்பான்

போரிற் தீயும் அள்ளிப்போக பின்னால்மிஞ்சிப்போனவரை
வேரிற்கூட வெட்டிச்சாய்த்து விறகாய் தீயும் மூட்டுகிறான்
மாரிக்கென்றே ஈசல்மொய்க்கு மதுபோல் எங்கள்ஈழத்தை
நேரில் மொய்த்து நிலமும்கொண்டு நீருக் கெம்மை தள்ளுகிறான்

ஒன்றை யெண்ணி பத்துகூறும் முன்னே பாதிப் பகைநீக்கி
தென்றல் வந்துசேருமுன்னே தீரர் வந்தே சேர்வீரே
குன்றை போலே கோடிப் படைகள் கூடி முன்னே வந்தாலும்
வென்றே விழியும் மூடும் நேரம் வினைகள் தீர்த்து சிரித்தீரே

கண்ணீர் விட்டுக் கதறிகேட்டோம் காற்றில் போன மைந்தர்களே
விண்ணைக்கீறி வீழும் மின்னல் வேகந்தன்னைத் தாரீரோ
மண்ணை விட்டு மானமிழந்து மறுகித் துயரும் கொண்டோமே
எண்ணக் கணமே எதிரியோடிச் செல்லச் செய்வீர் எப்படியோ?

நன்றே எங்கள் நரம்பில் ஊறும் நஞ்சைத் துரோக நினவுகளை
கொன்றே எங்கள் வெளிறிப்போன குருதி சாயம் நிறம் தேட
ஒன்றே நாங்கள் தமிழே என்று ஓங்கிக் கைகள் உயரத்தான்
தென்றல் நாமும்தீரம் கேட்டோம் தேடிப்புயலும் வாரீரோ

வெட்டும் மின்னல் வேகம் வேண்டும் வீரம் வேண்டும் விளையாடி
கொட்டும் இடியாய் கோரப்பசிகொள் குருதிபேய்கள் தனை ஓட்டி
தட்டும் கைகள் ஓசைஎழமுன் தணலாயாக்கி தரைமீட்கும்
வட்டப்புயலின் விந்தைசொல்லிவாழ்த்தி வீரம் தருவீரோ

No comments:

Post a Comment