Sunday, April 3, 2011

வாழத் தெரியலை..!


மண்ணுழுது விதைவிதைத்தேன் மழையைக் காணல்லே
மல்லிகையை நட்டுவைத்தேன் மலரவேயில்லை
கண்விழித்துக் காண நின்றேன் காட்சி தோன்றலை
காலமெல்லாம் காத்திருந்தும் விடியலே இல்லை

எண்ணெழுதிக் கூட்டவந்தேன் எழுதுகோலில்லை
எழுதிவைத்தார் என்கணக்குப் புரியவேயில்லை
தண்ணலைகள் துள்ளி விழும் தாமரை இலை
தங்கியதோர் நீர்த்துளியாய் தவிக்குதே நிலை

திங்களிலே ஆசைகொண்டேன் தேய்ந் தமாவாசை
தேடிவிளக்கேற்றி வைத்தேன் தென்றல் விடவில்லை
சங்கத்தமிழ் பாட்டெழுத சந்தம் வரவில்லை
சாத்திரமும்கேட்க சொன்னார் சனியன் ஏழரை

தங்கத்திலே தாலிசெய்தேன் தாங்கப் பெண்ணில்லை
தாரணியில் தேடிநின்றேன் தகுந்த தாயில்லை
நங்கை யொன்று கண்டு சொன்னேன் நானும் காதலை
நாணமுடன் காதில் சொன்னாள் நான்கு தாய், பிள்ளை

தெய்வமெண்ணி கோவில்சென்றேன் திறக்கவேயில்லை
தேவஇசை பாடி நின்றேன் தாளும் விலகல்லை
பொய்யெனவே திரும்பிவந்தேன் பேய்கள் விடவில்லை
பேரரசுஆட்சி கண்டேன் பேச மொழியில்லை

என்ன செய்வேன் வந்துவிட்டேன் இந்த உலகிலே
எப்படியோ வாழ்வதென்று இருந்த போதிலே
கண்ணிரண்டும் கட்டி நடுக் காட்டு வழியிலே
காரிருளில் விட்டதுபோல் வாழ்வு புரியல்லே

2 comments:

  1. அருமையான வரிகள்

    தமிழ்த்தோடம்

    ReplyDelete
  2. அருமையாக இருக்கு தங்களின் கவிதைகள். தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்து வருகிறோம்..

    ReplyDelete