Saturday, April 16, 2011

கல்லாக இரு, கடவுளே!

சுற்றும் உலகை ஏனோசெய்தாய் சுடரே, இறையொளியே!
கற்றும் ஏதும் காரணமறியேன் கருணை தருமொளியே
வற்றும் குளமாய் வாழ்வும் பாலை வனமாய் திரிவதும் ஏன்?
முற்றும் உண்மைகெட்டே மனிதர் மூச்சை இழப்பதும் ஏன்?

செத்தே பிணமாய் சிறியோர் பெரியோர்சென்றே மறைவதெங்கே?
கத்தும் குரலும் கதறும் அவலம் காணும்மரணமும் ஏன்?
நித்தம் சாவும் ரத்தம் என்றே நித்திலம் காண்பதுமேன்?
பத்தும் பலதும் அறிந்தேன் ஆயின் படைப்பின் இரகசியம் என்?

அன்பேகொண்ட இறைவன் என்றால் அவலம் செய்தது ஏன்?
இன்பம் கொள்ளென் றுலகைசெய்தால் இடையில் வறுமை ஏன்?
வன்மை மென்மை வலிமை எளிமை வகைகள் செய்தது மேன்?
இன்னும் வல்லோர் எளியோர்தம்மை இம்சை செய்வதும் ஏன்?

பச்சை மரங்கள் பழங்கள் குருவி பாடுங் குயிலென்றும்
உச்சிவெயிலோன் எழுமோர் மலையும் உலவும் முகில்வானும்
மச்சம்வாழும் கடலும் அலையும் மகிழ்வின் உருவங்கள்
இச்சேரின்ப உலகில்செய்து இடையில் இருள் தந்தாய்

வெட்டும்போது வீழும் ரத்தம் வேண்டும் பொருளாமோ?
தொட்டே மேனி துவளக் கொல்லத் துடிக்கும் விதம் ஏனோ?
கட்டிக்கதறக் காயம் செய்து கண்கள் மிரளத்தான்
சுட்டுகொல்லும் தேகம்வைத்தாய் சொல்! ஏன் செய்தாயோ?

பெண்ணைக்கட்டிப் பேதைஉடலை பெரிதே இம்சித்து
கண்ணும்காணாக் கொடுமைசெய்தே காமக்கொலை செய்யும்
வண்ணம்படைத்த வானின் பொருளே வழியும் இதுசெய்து
மண்ணில் குரூரம் மனிதம் கொல்லும் மனமும் ஏன்வைத்தாய்?

நீயே மனிதம் செய்தாய் ஆயின் நிகழும் செயல்யாவும்
போயேஅவனைச் சேரும் என்றால் பிழையை யார்செய்தார்?
நாயாய் பேயாய் ஆகும்மனிதன் நல்லோர் கொன்றானால்
தீயே ஞானச்சுடரே தெரிந்தும் தேகம் ஏன் செய்தாய்?

நல்லோர் கொல்லும் வல்லோர் தன்னை நாட்டில்பெரியவனாய்
கல்நேர் மனமும் கயமைகொண்டோர் காவல் புரிஎன்று
எல்லோர்விதியும் செய்யும் இயல்பே இந்தோ ருலகத்தை
சொல்லா விதிகள் சுற்றிநிற்கச் செய்தாய் நீதானே

கல்லா சிறிதோர் கையின் அளவு கொண்டேன் அறிவேதான்
எல்லா உலகின் இயற்பேரருளே இதை நான் அறியேனே
சொல்லா வளமும் வலிமை கொண்டாய் சுற்றும் உலகத்தை
நல்லாய் செய்யாய் என்றால் கோவில் கல்லாயிரு மேலாம்

1 comment: