Saturday, April 9, 2011

பூகம்பம் ஒன்றினைப் பெற்றவளோ இன்று
புன்னகை விட்டுக் கிடந்தனள்
வேகப் புயலொன்றைப் பெற்றவளோ இன்று
விண்ணி லெழுந்து கலந்தனள்
தாகத்தின் ஊற்றினை தந்தவளாம் இன்று
வானதிலேறிக் கரைந்தனள்
யாகத்தின் தீயும் அணைந்ததோ- இன்றது
‘ யாத்திரையோடு முடியுதோ?!

வீரத்தின் சின்னம் விரைந்ததோ- ஒரு
வெள்ளியென விண்ணில் நின்றதோ
சேரத் தலைவனைத் தந்தவள் -பெரும்
சேனை படைகளை கண்டவள்
நேர்மை தன்மானத்தை சொன்னவள் -இன்று
நித்திரைகொண்டனள் நெஞ்சிலே
பாரத்தை தந்துமே சென்றதேன் --இந்தப்
பாவ உலகம் வெறுத்ததோ

பேரை உலககெங்கும் சொன்னவன் -பெரும்
போரில் பகைதனை வென்றவன்
நாரைஉரித்தது போலவே -இந்த
நாட்டின் கொடுமை உரித்தவன்
ஊரையே வெட்டிப் பிரித்திடும் -அந்த
உண்மையில் பூமி பயந்தது
வேரை அழித்திட வந்துமே -புவி
வஞ்சகம செய்தினம் கொன்றது

வீரத்தாயும் இதைக் கண்டனள் -உளம்
விம்மி வெடித்துக் கிடந்தனள்
நேர்மைத் திறமையைப் பெற்றவள் -இந்த
நீசச் செயல்களும் கண்டனள்
தீரத்தைபெற்ற வயிற்றிலே -ஒரு
தீயைக் கட்டிவருந்தினள்
கோரத்தை எப்படிநெஞ்சிலே -ஐயோ
கொண்டு நடந்தனள் தெய்வமே

தேகம் அழிந்திடப் போயிடும் -அந்த
தெய்வமெமை விட்டுப் போகுமோ
ஏகும்வழியிலே நின்றுமே -எங்கள்
ஈர்கரம் கொண்டு வணங்கினோம்
தாயே தலைவனின் அன்னையே- நீயும்
தந்ததுவோ பொற்கலசமே
நாமோ நந்திவன ஆண்டியாய் -என்ன
நாடகமாடி உடைத்தமோ

போனதுதான் திரும்புமோ -அந்த
பொன்னெழில் காலமும் மீளுமோ
நானும் பிழைத்து இருப்பானோ- இந்த
நாடும் நமதென ஆகுமோ
தேனைத் திருநாட்டைக் காப்பமோ -நல்ல
தோள்வலி கொண்டு சுமப்பமோ
ஏனோ கலங்குது நெஞ்சமே -இந்த
ஏழைகளு கினியாரம்மா

No comments:

Post a Comment