Friday, April 8, 2011

சிவ சிவ திருவே! சிவந்தது ஏனோ?

சிவ சிவ என்றோம் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றோம் நம்மையழித்தார்
இறைஇறை என்றிட இறந்துமே வீழ்ந்தோம்

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் நீக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றே கொலைகள்புரிந்தார்

தொழுதோம் ஆயின் தொலைந்தன வாழ்வு
அழுதோம் ஆயின் அழிந்தன ஊரே
தழுவும் தமிழின் தந்தையென் இறைவா
எழுதும் விதியில் எதைநீ வைத்தாய்

அரசன் என்றொரு அசுரனை வைத்து
சரமென வீழ்ந்திட சடபுட இடியாய்
பறந்தே வானிற் பாவிகள் சுட்டும்
கருக இரசாயனக் குண்டுகள் வீசி

உருவம் அழித்து அருவமுமாக்கி
பெருவெளிவானில் திரி எனவிட்டோர்
குருபரனே இக் கொடியவர் தன்னை
இருஎனக்கூறி எமை யழித்தாயே

கலகல என்றும் களிப்புறு பெண்கள்
மலை மலையென்று மதமெடு ஆண்கள்
தளதள வென்று தவழ்ந்திடு குழந்தை
அழஅழக் கொன்று அழித்தனர் கண்டீர்

கூடியே சுற்றிக் கொலைப்படை சூழ
ஓடியேசென்று உயிர்தனைக் காக்கும்
குழிகளி லோடிக் குழுமிய மாந்தர்
புழுவாய்த் துடித்தே பேச்சுமழிந்து

இறைவா தொழுதே இருவிழிபார்க்க
உறைந்திடநெஞ்சும் உணர்வுமயக்க
கெஞ்சிய முகமும் கூப்பிய கையும்
வஞ்சகர் கண்டும் நெஞ்சமிரங்கா

மண்ணதைமூடி மானிடம்கொல்ல
விண்ணுறைதேவா வெள்ளிடைமலையில்
எண்ணியதென்ன ஏதும்செய்யாப்
புண்ணியபூமி பெருந்தீ  எரிக்க

விட்டது என்ன? கத்திடும் மழலை
தொட்டணை கொள்ளும் தூயவளன்னை
கட்டிளங்காளை கன்னியர் மூதோர்
ஒட்ட நசுக்க உருளும் வண்டி

வா வா சிவனென் றுனையேவணங்கி
நீயே  கதியென்  றழுதோர் தம்மை
காப்பாயென்றே கைதனைக் கூப்ப
சா! போ! என்றே சாற்றி யிருந்தாய்

பூவாய் உடல்கள்  புதைகுழிமூட
நீயோ கண்டும் நெஞ்சம்மிரங்கி
தீதே செய்தோன் தணலாய் எரிய
தீயைச் சொரிகண் திறவாதேனோ

ஆதிசிவாஉன் அருந்தமி ழென்னில்
அழியும் மொழியைக் காப்பதுவிட்டு
போதி மரத்தடி புத்தன் பார்த்து
புதிதாய் ஞானம் பெற்றனைதானோ

வானம் ஏறும் வெய்யோ னன்ன
மானத் தமிழன் மாண்பும்காத்து
ஈன மனத்து இழியோர் கொட்டம்
தானுமடக்கி தனியொரு பெண்ணே

வீதியில் சென்று விடிவது வரையும்
போதிய நகைகள் பொன்னு மணிந்து
ஊரினைச் சுற்றி உறைவிடம் சேரும்
பேரரும்வாழ்வைப் பெற்றுத் தருவான்!

நீதியைநெஞ்சும் நேர்மையைசெயலும்
நினைவில்தமிழும் கொண்டொரு தலைவன்
பாதியில் விட்டுப் பகலவன்போல
போனதை மீண்டும் புலரச் செய்வாய்

அவனே சக்தி அவனே சுடராம்
அவனே வானம் அவனேமண்ணும்
அவனே கடலும் ஆளுமை கொண்டோன்
அவனேவந்தால் ஆகும் (தமி)ழீழம்

No comments:

Post a Comment