Wednesday, April 27, 2011

மைந்தர் உயிரைத் தருவாரோ?

வேழம் விளையதிர் வீறுடை நடையும்
தோளை உயர்த்திய திறனொடு படையும்
ஆழ சமுத்திரம் அகல்விரி வானம்
ஆண்ட நிலம்அதில் அணிதிரள் மைந்தர்
போரை நிகழ்த்திய போதினில் கண்டே
புறமுது கோடிய எதிரிகள் இன்றோ
கோரமு கத்துடன் செய்தவை எல்லாம்
குற்றமெனச் சொலும் குவிஉல கன்றே

ஈழ மகள்இழி நிலைவிழி கண்டோர்
ஏங்கும் மனத்தொடு இடுசுடு தீயாய்
காலைமி தித்தெழு கடுதியில் புயலும்
காக்க நினத்தவர் கருணையில் தாயும்
சோலை மரத்திடை செழுமலர் மென்மை
சேர்ந்தோர் உள்ளம் சார்ந்ததுஎனிலும்
வாழநி னைத்தசு தந்திரம் வேண்டி
வல்லமை கொண்டே வஞ்சகர் களைய

சுற்றும் விரைவெடு சுழல்புவி அண்டம்
உற்ற வெயில்எறி  ஒளிகதிர் நிகரோன்
கொற்றவன் தலைவன் கூறிடச் செய்தே
கைவிர லசைவில் காரியம் ஆற்றும்
வெற்றியைக் கண்டு விசமொடு மனதில்
வீரம ழித்திட விரைந்தவர் வந்தார்
குற்றமிழைத் ததைக் கூடியே அன்று
கொலையை நிறுத்தத்  தவறிய தாலே

மைந்தர் இழந்தோம் மானிடம் சாக
மறவர் குடிகள் மனைகள் அழிந்திடச்
செந்தமிழ் வீரர் சரிந்திட மண்ணில்
சிறியோர் பெண்கள் சிதைந்தே ஒழிய
விந்தைகொள் வீரமு ழக்கமு மிட்ட
வியன் தமிழீழ எல்லை வகுத்தோர்                                  
செந்தணல் தீகொளச் செய்தனர் இன்று
தந்திட எண்ணின் தரவும் உளதோ

மண்ணை, மனிதம் காப்போமென்று
மானம் எண்ணிய மைந்தர் தம்மின்
எண்ணம் புனிதம் ஏற்கா, வலிமை
ஒன்றே யெண்ணிக் கொன்றோர் இன்றோ
கண்கள் நாலாம் காட்சிச் சனலால்
கருத்தே மாறிக் கண்டார் ஆயின்
மண்ணுள் புதைந்த மக்கள் மைந்தர்
மனிதர் உயிரைத் தருவா ருண்டோ

வீர திருவே வேங்கை செல்வர்
வெற்றிப்பபாதை  வெளிச்சவீடு
கோர விலங்கு குவிந்தோர் காட்டின்
குறுகிய வழியில் கொஞ்சம் ஒளியும்
நேரே தெரியும் நிலமை கண்டோம்
நினைவில் தமிழின் நிலத்தின் மீட்பை
விரைந்து காண விரும்பிக் கிடந்தீர்
விடியும் வழியில் வீறுடன் எழுவோம்

No comments:

Post a Comment