Saturday, April 9, 2011

வீரமைந்தரும் விலை போன சொந்தங்களும்

துடித்தான் துடித்தது விருத்தன்தானோ
தூயதமிழ் வீரத்தின் தோற்றமன்றோ
அடித்தான் அடித்தவனும் அரசர்தூதோ
அடக்குமுறை அரசாளும் அரக்கர்பேயோ
குடித்தான் குடித்ததென்ன நீரைத்தானோ
கொலைசெய்த தமிழ்மைந்தர் குருதியன்றோ
நடித்தான் நடித்ததுமோர் நாட்டுகூத்தோ
நரபலியென்றே தமிழர் வெட்டுங் கூத்தோ

வடித்தசெங் குருதியுடன் விருத்தன் கண்டும்
வாழுநிலை உணராதார் குருடரன்றோ
குடித்த தமிழுயிர்கள்ஓர் கோடி என்றால்
கொன்றவரை குணமுள்ளேன் என்னலாமோ
படித்தசில பிறவிகளும் பலருமின்னும்
பக்கமெது புரியாமல் பகட்டுக்காடி
பிடித்த பிடி விடமாட்டோம் என்றே ஆடி
பெற்றமண் காசுக்கு விற்றல் நன்றோ

அண்ணனவன் தம்பிகளை நம்பித்தானே
ஆழநெடுங் காடுறைந்து அல்லல்பட்டான்
கண்ணிரண்டை நம்பியவர் கையால் குத்தி
காணாதகுருடரென ஆனாரன்றோ
வெண்ணைதான் திரண்டுவரும் நேரம்பார்த்து
விறகென்று வாழை மடல் வைத்தாரன்றோ
மண்ணாகிப் போனதடா மண்ணின்மீட்சி
மனிதனாடா இல்லைநீ மாக்கள்மேலாம்

மாடிமனை வாழுகின்றான் தமிழர்தம்பி
மனம்தானு முயர்ந்திருக்கும் என்றே தூயோன்
கோடிபணம்கொட்டிப் பொன் பார்த்தே நிற்க
கூட்டிமணல் பொன்னென்று கொடுத்தாரன்றோ
தேடிவரும் பகைமுடித்த தீரர்மைந்தர்
செத்தவுடல் மண் அள்ளிப் போட்டாரன்றோ
பேடிகளாய் பிறந்தவைகள் இமயம்போயும்
பெற்றமனம் சாக்கடையின் புழுக்கள்தானே!

No comments:

Post a Comment