Saturday, April 2, 2011

சக்தியே! சஞ்சலம் தீர்!

உலவும்காற்றும் உயிரும்கொண்ட உறவைத் தந்தவளே
நிலவும் உள்ளத் துயரைப் போக்கி நிம்மதி தாராயோ
பலதும் மனதில் கொடியாய் தோன்றிப் படரச்செய்பவளே
பாசம் படரும் மனதில் என்றும் பசுமை தாராயோ

வளமும் வாழ்வும் மனிதன்கொண்டே வளரச்செய்பவளே
வந்தேன் உன்னை வணங்கிக் கேட்டேன் வசந்தம் தாராயோ
களமும் கனவும் கையில் இன்று காணோம் எனவாக
காற்றும்கூடப் பகையென்றாகிக் கண்ணீர் சொரியுதடி

தினமும் எண்ணம் கருகித் துன்பம் தெரியும் வாழ்வென்றே
தேனில் விழுந்த தீயோர் நஞ்சாய் தேகம் குலையுதடி
மனமும்கோணி மகிழ்வும்நாணி மாற்றம் வேண்டியொரு
மழையைத் தேடும் கழனிப் பயிராய் மறுகிக்கிடப்பேனோ

உலகின்சக்தி உயிரின் சக்தி ஓளியின் சக்தியெனும்
உள்ளத்திண்மை உள்ளேதருவாய் உள்ளம் இரங்காயோ
பலதும்பாடிக் கவியென்றாக்கும் பண்பைத் தந்தவளே
பாரில் இன்னும் பலநூறெண்ணும் பலமும் தாராயோ

நோயும் பிணியும் நிற்காதெந்தன் நினைவில் மகிழ்வோங்கி
நீயும் சக்தி நிறைவைத் தந்து நெஞ்சில் கவியோங்கி
பாயும்நதியாய் பொங்கும் வெள்ளப் பாங்காய் பலநூறு
பாவும் புனையக் காதில்வந்து பாடிச்செல்லாயோ!

No comments:

Post a Comment