Sunday, April 24, 2011

மீட்பீரோ எம்மை?

பாவங்கள் சிலுவையில் சுமந்தவரே இந்தப்
  பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
 தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
  மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம்  நாம்
 சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
  வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
  குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே  -நாம்
   வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
  முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
 திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
  பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
   விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
    நேசனே  மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
  பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
  லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
  சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
  வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
  கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
  பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
   வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
   தேசமும் தாருமய்யா !

No comments:

Post a Comment