Saturday, April 9, 2011

கனவு கலைத்தெழுவாய்!

வெட்டிடும் மின்னலும் தொட்டதாய்ப் பூமியில்
வெற்றியும் காண்போம் எழுந்திடடா
பெட்டியில் பாம்பென தொட்டிலில் சேயென
கட்டிக்கிடந்தது போதுமடா
கொட்டிய தேள்களும் குத்திடும்வாள்களும்
கொல்லவும் நீயும் குனிவதுவோ
வட்டி முதலென வாங்கிய முற்றிலும்
தட்டித் திரும்பவும் நீகொடடா

நாடும் நம்தேசமும் நாளும் நலிந்திட
நாய்களும் சூழ்ந்து கிடக்குதடா
போடும் இழிந்தவன் பிச்சைக்கு ஈடென
பூமியின் தூய்மை யழிக்குதடா
காடும் உறங்கிடும் காலம் முடிந்தவர்
கண்களு றங்கிடும் மேடைகளில்
பேடும் தரித்திரப் பேய்களும் மான
மிழிந்த பிறப்புகள் ஆடுதடா

தீயினில் காடுகள் வேகிடும்போதினில்
தென்றல் குளிர்ந்திடப் போவதில்லை
சாயமரங்களை வெட்டியே வீழ்த்திட
சந்தனவாசம் எழுவதில்லை
பேய்கள் பிணங்களைத் தேடியலைகையில்
பூக்களின் வாசம் மணப்பதில்லை
தாயவள் சாம்பலை தன்பெயர் முன்னிலை
போனவன் கும்பிடப்போவதில்லை

கண்களும் மூடியே காணுமி னித்திடும்
காட்சிகள் மாறக் கனவுகளும்
வெண்ணொளிவீதியில் மென்னிளம் பூக்களும்
வீழ்ந்திட வானில்மி தப்பதுவும்
பெண்களும் சூழ்ந்திடப் பேசிமகிழ்ந்து
சிரித்து மலர்களைத் தூவுவதும்
புண்கள் பெருத்துப் பழுத்திடும் வேளையில்
போதும் நிறுத்திப் புறப்படடா!

No comments:

Post a Comment