Thursday, August 2, 2012

தீட்டாத ஓவியம்

               

நீருக்கு நிறமுமில்லை நிழலுக்கு வண்ணமில்லை
பாருக்கு அமைதியில்லை பார்வைக்கு எண்ணமில்லை
வேருக்குக் காற்றுமில்லை விடிவுக்கு மறைதலில்லை
யாருக்கும் பூமியில்லை யாத்திரை பயணம் ஒன்றே

போருக்கு அன்புஇல்லை புகழுக்கு எதிரியில்லை
நாருக்கு மணமுமில்லை நடப்பவை தீமையில்லை
ஊருக்குள் சேதியில்லை உறவுக்கு சொந்தமில்லை
நீர்நிலை வற்றும்வேளை நீந்திட அலைகளில்லை

கூருக்கு குத்தல்பண்பு குழிசெயல் வீழ்த்தல்நீதி
காரிருள் கண்மறைத்தல் கனவுகள் உண்மை மீறல்
பேரருள் ஞானம்தானும் பிழைசரி தேர்ந்து செல்லல்
யாரதை மாற்றக்கூடும்  நாளதுமட்டும் மாறும்

பேருக்கு பிறவி, வாழ்நாள் புரிந்திட மறந்த ஜென்மம்
சீருக்குச் சிறுமை கொள்கை சிரித்திடத் தகுந்த புத்தி
யாருக்கும் தூரவானத் திருந்திடும் நிலவு என்றும்
பாருக்குள் இன்பங்கொள்ளும் பாமலர் சோலை காணும்

மறைந்திட காணுந் தீபம் மாபெரும் சூர்ய உதயம்
குறைவது வீணை ராகம் குரலொலி கூடிப்பாடும்,
இரைவது நிற்க மீண்டும் எழுந்திடும் இனியகீதம்
இரவது விடியும்போது இனியவெண் நிலவு மாயும்


****

3 comments:

  1. தீட்டாத ஓவியம்

    மறவாத காவியம் !

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபால் அவர்களுக்கும், இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும்
    இதயங்கனிந்த நன்றிகள்!

    எனது அடுத்தகவி தங்கள் இருவருக்கும் சமர்ப்பணம்.
    அன்புடன்
    கிரிகாசன்

    ReplyDelete