Tuesday, August 21, 2012

அன்னையின் உள்ளம்

தொட்டாலும் மொட்டவிழப் பூக்காதோ, பூவிதழ்கள்
சட்டென்று விட்டழகு கொள்ளாதோ, உன்விழிகள்
பட்டாலும்  காய்பழுத்து வீழாதோ, நீள்வானப்
பொட்டாம் மதிஒளியைப் போர்த்து, மகிழாதோ

கொட்டும் இமையெழிலும் காணவே வீணைசுரம்
மெட்டா யெழுந்திசையும் மீட்டாதோ அன்னமென
எட்டா நடைபழகி இன்பமுடன் வைத்தஅடி
விட்டேன்போ வென்றுமடி வீழ்த்தி மகிழாதோ

நின்றே நடைபழக நீவிழுதல் கண்டாலத்
தென்றல் அணைத்துன்னை தேன்கனியே காவாதோ
பொன்போலும் ஒர்வண்டு பூவெண்ணி செம்மையுறு
நின்தாள் மலர்ப்பாதம் நின்றுமது தேடாதோ

அன்பாலே அன்னைமடி ஆறித்துயில் கொண்டவளே
அன்னை யெனப் பெயரான ஆக எனை செய்தவளுன்
தென்பால் உயிர்வாழத் தோன்றுதடி கூறுந்தமிழ்
நின்பால் இனிக்குமொழி நேருஞ்சுகம் பேசிடடி

தொட்டில் தனில்தோன்றும் திங்களென காணுவளே
கட்டும் கனிமழலைக்  கொஞ்சுமொழி கற்பகமே
தொட்டால் நெகிழ்ந்து மனம் தோற்றுவிடும்மென்னிதயம்
கட்டே விரிந்து மன்ம் காணுதடி சொப்பனமோ

நின்றால் வரும்புயலோ நிற்குவிதம் மாறியுடன்
தென்றல் எனத்தோன்றி தேகந்தனை தீண்டமலர்க்
கன்றாய் கருதி மழைகாண, முகில் ஓடவைத்து
வென்றே கதிரெழுந்து வெம்மைதந் தாற்றுமடி

பொன்னாய் விளைவயலில் போகுமிளம் காற்றூதி
முன்னால் வளைகதிரை மேனிகொள தேம்பியிரு
கண்கள் வழிந்தொழுகக்  கத்தியழும் நேரம்மனம்
புண்ணாய் துயர்பெருகி போதெல்லாம் நோகுதடி

பொன்னாய் கிடைத்தபெரும் பேறேநீ பூமியிதைத்
தன்னால் சுழலவிடும் சக்தியினை நாள்நினைந்து
என்னால் முடியுமென ஏற்றமிக உள்ளுணர்ந்து
அன்னை யவள்தனை வேண்டு, ஆற்றலுனதாகுமடி

1 comment:

  1. சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் சிறப்பான கவிதை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete