Saturday, August 18, 2012

கொல்லாதே கொல்லாதே

கொல்லாதே கொல்லாதே கூவுகிறேன் - தமிழ்
சொல்லாற் குயில்போலப் பாடுகிறேன்
நில்லாதே என்றெண்ணம்  மிஞ்சுவையோ - கொண்ட
நெஞ்சின் கனவுகள் பஞ்சனலோ
கல்லாலே கல்லாலே கோவில் செய்து - அங்கு
காணவென்றே தெய்வம் உன்னை வைத்து
எல்லாமே தந்துனைப் பூசைசெய்தும் - எம்மை
ஏனோவா ழென்றிங்கு விட்டதில்லை

வல்லூறு குஞ்சினைத் தூக்கிவிடு - என
வாழ்வின் விதியமைத் தாய்இறையே
நல்லோரின் நெஞ்சங்கள் நாதியற்று - விதி
நாளும் பலிகொள்ள வைத்ததென்ன
வில்லாலே அம்பையும் விட்டதுபோல் - உயிர்
வேகமெடுத் தந்த வானடையும்
சில்லால் உருண்டிடும் தேர்வழுகி - மலை
செல்லா துருண்டுகீழ் வீழ்வதென்ன

வெல்லாத தாயெமை வாழவைத்து - அதில்
வேண்டுமென்றே துன்பம் மேவவிட்டு
கல்லால் எறிந்துகாய் வீழ்த்தலென -அந்தக்
காலமும் வீழ்த்திக் களிப்பதென்ன
நில்லாய் இருவென்று நேசமுடன் - எமை
நீலக்குழி சுழல் பந்தில் வைத்து
பல்லாங்குழி யாட்டம் ஆடுவதேன் - வாழப்
பாதியில் வெட்டிப் பறிப்பது மேன்

சொல்லாலே செந்தமிழ்ப் பாடிஉனைப் - பெரும்
செந்தீயின் ஆதிமுதற் பொருளே
கொல்லாதே என்றே இறைஞ்சி நின்றேன் - உந்தன்
கோவம் தவிர் என்று கெஞ்சுகிறேன்
வல்லாதி சக்தியிவ் வையகத்தைப் - பெரும்
வானில் உருட்டிக் களிப்பவளே
சொல்லடிசக்தி உன் தூயமனங் - கொண்டு
சோதி என்தீபம் எரிய விடு

**************

1 comment:

  1. ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்கும் கேள்விகள்.... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete