Tuesday, November 30, 2010

மைந்தரே தாருங்கள்!

கடல் குளித்து முத்தெடுத்து கையிலிட்டோமே -அதைக்
    காலமெல்லாம் காத்துமனம் களித்திருந்தோமே
உடல் பறித்து உதிரமிட்டு உலகமெல்லாமே -எம்மை
     உரிமையற்ற இனமுமென்று ஒதுக்கிவைப்பதேன்
விடல் எடுத்த பருவமதில் விடுதலைக்கென்றே - நீங்கள்
      விரைந்துசெல்ல விதிமறித்து விலைகொடுத்ததோ
தடல் எடுத்து அடியடித்து மின்னும்வேளையில் - அந்த
      தருமத்துக்கும் பயமெடுத்து தவறு செய்ததோ

கரமெடுத்த தடியடிக்கு அழிவுகண்டதும் -அந்த
   கடவுளுக்கும் மனமெடுத்த அச்சம் பீதியோ
உரம்விடுத்து உண்மைகெட்டு உலகில் நீதியும் -ஒரு
   ஓரமாக நின்று எம்மை அழியவிட்டதோ
மரமறுத்து வீழுவதாய் மண்ணில் உம்மையே - பெரும்
   மலையறுத்து வீழ்த்தியன்றோ மடமை செய்தனர்
குரல்வளைக்கு கீறி எம்மைக் குரலெடுக்கவும் ஒரு
   கூவியழும் வலிமைகெட்டுக் கொன்றதேனையா

அருமை இந்தஉலகு வெறியும் கொண்டு ஆடுது - பல
   அரக்கமரம் விதைகளெல்லாம் வேரைஊன்றுது
செருக்கெடுத்து சிங்களமும் சேர்ந்துஆடுது -அங்கு
    சீனமண்ணும் இந்தியாவும் பங்குகேட்குது
பருத்துவரும் ஆசை ஈழம் பகிரலாகுது - இதைப்
    பார்த்துலகம் இருப்பதில்லை பகைமைகூடுது
சரித்திரமும் இருப்பதில்லை மாற்றம்கொண்டது -இனிச்
    சாதிப்பதோ எமதுகையில் சற்று விழித்திடு

உரமெனவே ஆனவரே உமது வீரமும் - இனி
  உறங்கியது போதுமதை உறவுக் கீந்திடும்
வரமெனவே தந்து எங்கள் வறுமை போக்கிடும் - எமது
   வாழ்வை வென்று ஓங்கிடணும் வழியை காட்டவும்
சரமெடுத்த வெடிவெடித்துத் தருமம் ஓங்கட்டும் -அது
   தலையெடுத்து மீண்டும்பாதை சரியென்றாகட்டும்
புறமெடுத்து எதிரிவந்த வழியிலோடட்டும் -இனிப்
   போதுமென்றே யெண்ணி நல்லபுத்தி சேரட்டும்

புன்னகைத்து ஈழஅன்னை பொலிவு காணட்டும் -அவள்
   புன்சிரிப்பில் எமது இனம் பொங்கிவளரட்டும்
என்னவைத்து உறுதிதன்னை மனமெடுத்தீரோ -அதை
    உள்ளமெங்கள் கொள்வதற்கு ஒருவழிசெய்வீர்
அன்னைதேசம் காக்கவேண்டும் அவசரம் கண்ணே -நீங்கள்
   ஆவதெல்லாம் உறுதி மனஆற்றல் நேர்மையும்
வன்மை கொண்டு நெஞ்சங்கண்ட வெற்றிதன்னையும் -எங்கள்
   வாழ்வில்காணும் வழியைச்சொல்லி தூங்கப்போங்களேன்
    

No comments:

Post a Comment