Thursday, November 11, 2010

கவியும் தமிழும் நானும்

கவி என்ற தேரேறித் தமிழென்னும் உலகோடி
களிகாண மனமாகினேன்
செவி கொள்ள இனிதாகச் சிறிதேனும் பதமாக
செந்தமிழ் இசைபாடுவேன்
புவிவாழும் தமிழன்னை பொழுதேனும் மனம்கோணிப்
போகாமல் மொழி போற்றுவேன்
குவி வண்ண மலர்கொண்டு திருஅன்னை அடிபோற்றித்
தினம்தினம் துதி பாடுவேன்

கவிஎன்னும் சுவைவீணை உணர்வென்ற இழைதொட்டுக்
களிகொள்ள இசைமீட்டுவேன்
புவிமீது தமிழன்னை இருபாதம் அடிமீதில்
போயெந்தன் தலை சாத்தினேன்
குவி வானம் பொழிகின்ற மழைபோல இவன்நானும்
குளிர்கொண்ட கவி கொட்டுவேன்
செவிதன்னில் இனிதென்று செந்தமிழ்ச் செல்வியும்
சிலிர்த்திட உணர்வேற்றுவேன்

பழம்தேனும்,வெல்லமும் பாகும் கலந்து ஒரு
பாலிட்ட இன்ப சுவையில்
விழைந்தோர் கவிசெய்து வீரமகள் தேவியவள்
வேண்டுவரை ஊட்டி நிற்பேன்
குழைந்தமுது உண்டவளை கொண்டைக்கு மலர்சூட்டி
குமுத மலர்ப் பாதம்தன்னில்
தளை சந்தமணி சிலம்பு தான்கொண்டுஎழில்கூட்டி
சாமரையும் வீசியே நிற்பேன்

துள்ளியுமே ஓடிவரச் சுந்தரமாய் பாட்டினிலே
சொல்லாலே தாளமுமிட்டுத்
தெள்ளிசையைத் தென்றலென தேகம்தனை வருடியவள்
தீந்தமிழின் தாகம் தீர்ப்பேன்
புள்ளினமும் இசைபாடப் பூவண்டு சுதிசேர்க்கப்
பொன்மாலை இளவேனிலில்
அள்ளியொரு ஆயிரமாம் அழகான கவிசொல்லி
அழகென்றே தமிழ் பாடுவேன்

No comments:

Post a Comment