Wednesday, November 24, 2010

அழும்வரை சிரிப்பேன்!

மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்
      மகிழ்வென்ற நிறம்பூசிடும்
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்
       தித்திப்பை விழிகாட்டிடும்
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்
       வலிதந்து ரணமாக்கிடும்
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி
       எழில்போல உருமாற்றிடும்

பணமொன்றும் தீர்க்காது பட்டாடை,பல்லக்கு
     தலைதூக்கி எவராடினும்
பிணமென்று விதிசொல்லிப் பின்வாசல் வழிவந்தால்
     பேசாது உயிரோடிடும்
மணமென்றும் மனையென்றும் மக்கள்மற் றுறவென்று
       மறந்தேநம் விழிமூடிடும்
கணந்தன்னில் கரியாகிக் காற்றோடு புகையாகிக்
     கனவென்ற நிலையாகிடும்

களவாக எமன்வந்து கயிறானதெறிகின்ற
    கணந்தன்னில் எதுகூறினும்
விளையாது பயனேதும் விரைந்தோடி உயிர்சென்று
     விளையாட்டு முடிவாகிடும்
களையாது தினம்தோறும் கனவோடு உயிர்கொண்டு
    புவிமீது நடந்தோடினேன்
வளமான வாழ்வென்று வருந்தாமல் திமிரோடு
     பலநூறு பிழை யாற்றினேன்

எனையாளும் இறைவா நீ இதுகால வரைதானு
       மிரு என்றாய் புவிமீதிலே
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்
     வாழ்ந்தேனே அதுபோதுமே
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச
     தெரியாமல் அதில்மாண்டிடும்
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது
      நிழலாக்கி உயிரோடிடும்

அதுபோலும் விதி சொல்லி அகல்கின்றவரை நானும்
       மகிழ்வோடு கூத்தாடுவேன்
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்
      போலாகி ஒளிவீசுவேன்
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்
       அழகாகப் பறந்தோடுவேன்
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனபாடிப்
        போகும்வரை ஆடுவேன்.

No comments:

Post a Comment