Monday, November 29, 2010

நேரம் ஓடமுன் நீயோடு!

கொட்டும் விழிகளில் சொட்டும் கண்ணீர்
விட்டுப் போவது எப்போது
தட்டும் கைகளும் சட்டக் கதவினை
தட்டித் திறப்பது எப்போது
கட்டிக் காத்தோம் மண்ணைப் பகைவனும்
விட்டுப் போவது எப்போது
சொட்டும் குருதியும் நெஞ்சக் குழியினுள்
சுட்டுக் குமுறுது என்செய்வேன்

நெட்டுக் கிடையென நீயுங் குப்புற
நித்திரை கொள்வது முடிவாகி
விட்டுச் சடரென வேகம் கொண்டிட
விழிகள்திறப்பது எப்போது
தொட்டுப் படபட வென்று முடித்திடச்
தொகையா யுள்ளது பலவேலை
முட்டித் தலைவழி வெள்ளம் பரவியுன்
மூச்சுத் திணறிட முன்னோடு

கட்டிக் கல்லொடு கடலில் தள்ளிடக்
கயவனெழுந்திட முன்னாலே
எட்டிப் படபட என்று கொடுத்தவன்
எண்ணம் பொடிபடச் செய்யாயோ
வெட்டிக்கதைகளும் வீணில்பேச்சுகள்
விட்டே சேர்ந்திடு ஒன்றாக
விட்டுதமிழனும் வேற்றுக் கொள்கையில்
வினையாய் அழிவது வேண்டாமே

டக்டக் டக்கென நேரம் ஓடுது
தாவி விரைந்திடு, நீயோடு
திக்திக் திக்கென அன்பில் நெஞ்சமும்
சேர்ந்து துடித்திட விரைவோடு
தம்மம் சரணமும் கச்சாமித்தலை
தட்டிக் குதிபட பயந்தோட
இம்மை எல்லையில் மறுமைகாண்பது
இவனுக் கெப்படி காட்டாயோ


 

No comments:

Post a Comment