Friday, November 12, 2010

மன்னவனோ இவன்!

கோவிலோ கூடமோ மாளிகையோ -இது
 கொற்றவன் நிற்கவே மாடமதோ
மாவிலை கட்டிய தோரணமோ -இம்
 மன்னவன் சாயச் சிம் மாசனமோ
தேரிலே சுற்றிடும் ஆனந்தமோ -அது
  தென்றலேறி விளையாடிடுதோ
பூவிலே தொங்கும்பல் மாலைகளோ -இடை
  பூத்ததும் வானத்துத் தாரகையோ

ஏறியே ஓடத்தான் மேகங்களோ -இந்த
   ஏழையை சுற்றிநல் தேவர்களோ
கூறியே கொட்டினர் பூமழையோ -இவன்
    கொண்டது வாழ்வில்அரி தல்லவோ
பேறிலே நல்லதோர் பேறிதுவோ -அவன்
   பிரம்மனும் எண்ணாப் பெருங்கொடையோ
மாறியே கொள்ளும் பகலிரவோ -இம்
   மாற்றம்மென் வாழ்வில் பெருங்கனவோ

அன்பினில் இனிய செந்தமிழே -என்
   ஆவி கலந்திட்ட பொன்மகளே
என்பிலும் ஊடேஓர் தீஎரிதே -இதில்
     இன்ப நினைவும் பெருகிடுதே
பொன்னெனும் வெண்ணிலா பூத்திருக்க -அயல்
    பொய்கையில் நீரலை ஆர்ப்பரிக்க
சின்னஇசை பாடித் தென்றல்வர -அதில்
    செவ்விதழ் பூமணம் சேர்ந்துவர

மின்னும் வண்ணவெடி மத்தாப்பென என்
   மேனியும் இன்பமாம் பூச்சொரிய
கண்ணிலே ஆனந்த நீர் பெருக -இது
   கனவேயென் றென்மனம் கேலி செய்ய
தன்னிலே சொர்க்கம் தரைநழுவி..வந்து
   தாழுதே காலடி தாங்கிடுமோ
என்னிலேஅன்பு கொள் செந்தமிழே இனி
   இங்கிவன் உன்மடிப் பிள்ளையன்றோ!

No comments:

Post a Comment