Monday, November 15, 2010

உன்னை நீ மாற்று!


அன்பான உள்ளங்கள் கண்ணாடிபோலெதிர்
ஆழம் புரிந்துகொள்ளும்
முன்னாலிருப்பதை காட்டிவிடும்
முகத் திரைக்குள் ஊடுருவும்
பின்னால் நடப்பது ஏதறியோம் -சிலர்
பேச்சு மயக்கிவிடும்
தன்னால் நடப்பது யார் நிறுத்த இந்த
தாரணியில் முடியும்

கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?

வில்லைவளைத்தவன்முல்லை மலர்கணை
விட்டிடும் மன்மதனால்
எல்லையற்ற சுகம் எண்ணி மனதினில்
இன்பக் கனவுவரும்
கல்லும் கரைந்து கணம் தடுமாறிட
காட்டினில் தீஎரியும்
இல்லையென வாழ்வு ஆகி உயிர் துடித்
தேங்கிடும் நாளும்வரும்

தொல்லை தரும் இந்தவாழ்வு கசந்தொரு
தூர நினைவுவரும்
எல்லைகடந் தந்த வானில் கலந்திட
ஏனோமனம் இசைக்கும்
கல்லை இணைத்தொரு கடல்குதித்திட
காணும் இதயம் சொல்லும்
நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.

சொல்லும் இனியதோர் சுந்தரத்தேனிசை
செவியில் கேட்டுவிடு
செல்லசிறுவர் மழைலையிலே உந்தன்
சிந்தனையைச் சிதறு
நல்லதமிழ்கவி நாளும்படித்து ஒர்
வல்லமனது கொள்ளு
வாழ்வின் கசப்பினை மாற்று திடமுடன்
மற்றொரு பாதை செல்லு

No comments:

Post a Comment