Tuesday, November 2, 2010

உலகம் யாவும் அவளே சக்தி!

உருளும் உலகும் ஓடும்நதியும் ஓங்கிப்பெருகும் கடலும்
புரளும் அலையும் புயலும் பொழுதில்சிதறும் எரியும் மலையும்
கருவும் உயிரும் கனவும் உலகில்காணும் செயல்கள் யாவும்
பெருகும்வண்ணம் உளமே கொண்டாள் அவளே அன்னை சக்தி

தரையும் விண்ணும் தாவும்காற்றும் தாண்டி சென்றால்வானும்
விரையும் அண்டம் வெளியில் பந்தின் குவியல் எனவே சுழலும்
நிரையில் ஓடும் ஒளிவெண்படலத் துறையும் கோள்கள் பலவும்
வரையும் ஒழுங்கில் வார்த்தே செய்தாள் வடிவே அன்னைசக்தி

பனியும் குளிரும்பச்சை இலையும் படரும் கொடியும் தவழும்
கனிகொள் மரமும் காலம்காணும் கனிவேதாரும் வகையும்
தனிமை மனமும் தாங்காநெஞ்சும் தவிப்பும் தாகம்வெறுமை
மனிதம் கொள்ளும் நிலையும் செய்தாள் மங்கா தொளிரும் சக்தி

உயிரில்நின்றாள் ஊனில்சென்றாள் உதிரம் ஓடச்செய்தாள்
வயிறில் பசியும் வாழ்வில்வெறியும் வார்த்தே எம்மைச் செய்தாள்
பயிரில்செழுமை தந்தாள் ஆயின் பருவச் செழுமைதந்தே
உயிரில் தீயை எரியச்செய்தாள் இவளே அன்பின் சக்தி

விண்ணில் சக்தி, மண்ணில் சக்தி, வேகக் காற்றில்சக்தி
அண்டம் எங்கும சக்தி, சிதறும் அனலின் சீற்றம் சக்தி
எண்ணம் கொள்ளும் எதுவும் சக்தி இவளே எங்கும் சக்தி
கண்ணுங்காணா வானத் தொலைவில் காண்பாள்அவளே சக்தி

No comments:

Post a Comment