Sunday, November 28, 2010

வராத வசந்தங்கள்

வரமொன்று வேண்டினேன் பெண்ணே -நல்
வடிவே நல்வாடாத மலரே செந்தமிழே
உரம்கொண்டு நான்பாடி உயிரே - உன்னை
உலகெங்கும் இல்லாத உயர்வாழ்வு தந்து
பரவிடும் உயர்வான மங்கு -நீள்
பரந்தோடும் மேகமாம் பஞ்சென்ற தேரில்
விரைந்தோடி விளையாடச் செய்யும் -அந்த
விதமான உயரின்பம் விளைந்தாக வேண்டும்

மணம் கொண்டமலராகும் உந்தன் -மீது
மாறாத அன்பெனும் சுவைகொண்டுநானும்
குணம் கொண்ட வண்டாகக் கூடி - ஒரு
குறைவற்ற இன்பங்கள் பெறவேண்டும் ஆடி
பணமென்று பின்னோடும் பூமி - இதில்
பண்பான உள்ளங்கள் குறைவென்று ஆகி
வனம் கொண்ட விலங்கான வாழ்வில் - வேறு
வகையாக நான் மாறும் வாழ்நிலை வேண்டும்

திசையெங்கும் சுழன்றோடும் காற்றில் -நீயும்
திருமேனி சிறகுகள் கொண்டே பறந்து
அசைந்தோடி வலம்வந்து புவியில் - கண்ணே
அயர்வாக குளிரோடும் ஆற்றோரம் நிற்க
பிசைந்தாசை ருசியோடுஅமுதம் - நான்
பேசுந்தமிழ்கொண்டு பாவென்று ஊட்ட
இசைகொண்டு நீபாட நானும் - மாலை
இரவாகும்வரை நின்று இன்பங்கள்கண்டு

ஒளிந்தோடிப் பொழில்தன்னில் ஆடிஓர்
உணர்வோடு களித்தேநல் எழில் தன்னைநாடி
களிகொண்டு திரிந்தாட வேண்டும் - வாழ்வு
கனவாகிப் போகாமல் விடிந்தே எழுந்தால்
அழிகின்றவாழ்வாக வேலை - அடிமை
ஆகின்ற நிலைவீடு பிள்ளைகள், நூறு
பழி சொல்லும் மனையாட்டி கோவம் -இன்னும்
பக்கத்து அயல்விட்டுப் பாவங்களாக

கிலிகொண்டு வாழ்ந்திடும் கோலம் - ஒரு
கீழெண்ணம் பணம்வேட்டை கூடாதகூட்டம்
பலிகொண்டும் எவரையும் பார்க்கும் -ஓர்
பரிதாப நிலைகொண்ட வாழ்வதும் வேண்டாம்
நிலைமாற்ற வேண்டினேன் விதியே -அதை
நிச்சயம்மாற்றிடு நினையன்று கேட்டும்
வலிகொண்டுவாழ்கிறேன் இன்றும்- ஏன்
வாரா வசந்தங்கள் வாழ்வில் நிறைத்தாய்?

No comments:

Post a Comment