Wednesday, November 10, 2010

பிரிவென்னும் துயரம்!

நீ அழுதால் நான் வருவேன் அன்பெனும் தேரில் -என்
நினைவழுதால் யார்வருவார் நீயில்லை யாயின்
பூ அழுதால் தேன் வடியும் பூஇதழ் தன்னில் பகற்
பொழுதழுதால் இருள் பரவும் பூமியின்கண்ணில்

மீனழுதால் நீரறியு மாழ்கடல்தன்னில் அந்த
மேகமழை தான்முகிலின் ஊற்றிடும் கண்ணீர்
நானழுதால் நீயறிவாய் நாளதுதன்னில் -இன்று
நாளிலுயிர் வாடுகிறேன் நீயின்றி வீணில்

தாயழுது நான் பிறந்தேன் பூமியில் ஓர்நாள்- ஒரு
தரமழுது நிலம்விழுந்தேன் தரணியில் சேயாய்
வாயழுது சோர்ந்துவிட்டேன் வாழ்வினில் பூவாய் இனி
வார்த்தையின்றி அழுவது என் விதியடி பாவாய்

சேயழுதால் தாயெடுப்பாள் தீர்த்திடச் சோகம் அதை
சேர்த்தணைத்து கொஞ்சிடுவாள் சென்றிடும் கோபம்
நோய்பிடித்தால் தேகம்அழும் நொந்திடும் பாவம் - என்
நினைவழுது நேர்வது உன் நெஞ்சமே கூறும்

பாய்படுத்தால் ஊரழுது பார்க்குமே, காகம்- மாண்ட
பறவைக்காக சேர்ந்துஅழும் பெரிதொரு கூட்டம்
பாய் அலைகள் ஓடியழும் புரள்வது கடலில் - கரை
போயழுது திரும்பிவரும் தனிமையென் தவிப்பில்

தாமரைப்பூ நீரிலாடும் போலது நானும் - இங்கு
தவித்துமனம் ஆடுகிறேன் தாங்கியே நாளும்
நீமறைந்து நிற்பதென்ன நெஞ்சமே இன்னும் என்
நினைவிருக்க வந்துவிடு நிறம்கொள்ள வாழ்வும்

விறகடுக்கி தீயிலிட்டால் வேகுமே தேகம் -சிறு
விரல் நகமும் மிச்சமில்லை சாம்பலே ஆகும்
உறவிருக்கும் போதிலெனில் ஒன்றெனக் கூடு -இந்த
உலகமதில் எதுவும் இல்லை உயிர் சென்றபோது

நிறமழிந்து வெளிறிவிட்டால் உடலது வீணே அந்த
நினைவழிந்து பிரிந்துவிடும் உலகமே போமே
மறந்து உனைவாழ்த லுண்டோ மனமழ நிதமும் -நல்ல
மாற்றத்துக்கு வழியுமுண்டு மாறிடு மனமும்


 

No comments:

Post a Comment