Tuesday, November 2, 2010

நானல்ல அவளே எல்லாம்!

கருவாய் உதிப்பாள் கணமே வளர்வாள் கவிதையென மலர்வாள்
தருவாள் மனதில் சுகமும்இதமும் தமிழாம் இவள் எழிலாள்
சிறுவாள் கொண்டே எதிரே நின்று சீறும்பகை முடித்து
பெருவாழ்வெய்த செய்வாய் என்றாள் பேசுந்தமிழ் எனக்கு

வருவாய் எந்தன் திருவே உருவே வாசல்தனைத் திறந்து
மருவாய் எனது மனதில் என்றும் மறையா தொளிவிளக்கு
உருவாய் உள்ளத் தெழுவாய் நடப்பாய் உள்ளம்தனில் இருந்து
பெரிதாய் நதியாய் பெருகித் தமிழாய் பொங்கிவழிந்தோடு

புகழும் பணமும் பொய்யா யுழலும் புவிதானோர் துரும்பு
நிகழும் வாழ்வில் நினையா தவளை இருப்பவனோ விரும்பு
இகழும் பொழுதும் ஏற்றும்பொழுது எண்ணாதெனது என்று
முகிழும்மனதின் தமிழாம் அவளே முழுதும் எனக் கருது

தமிழோஎந்தன் திறமையன்று தலைமேல் கனம் இறங்கு
அவளே வந்தாள் அருகேநின்றாள் அன்னைத் தமிழ்படித்து
குமிழ்வாய் உதிரும் குரலை எழுதாய் என்றாள் எனைக்குறித்து
கமழ்பூ மலராய்த் தமிழில் கனிந்தாள் கவிதைக் கிவள் பொறுப்பு

No comments:

Post a Comment