Sunday, January 29, 2012

துயிலும் இல்லங்கள்


தோள்தந்து துணிவோடு தேசமதைக் காத்த
   தீரர்களின் கல்லறைகள் தொலைந்த இடம்காணீர்
நீள்மரங்கள் நிரைநின்று நிலைகுலைந்து ஆடும்
   நிழல்கண்ட குருவியதி லிருந்துமெல விசும்பும்
வாழ்வென்று பூத்தமலர் வாடியிதழ் சோரும்
   வான்நடந்த முகிலிரங்கி சோகமழை தூறும்
பாழ்என்று மண்ணை யள்ளிப் படர்காற்றும் கண்ணில்
   பட்டுவிட வீசியபின் சாபமிட்டு ஓடும்

வேகஇடி மின்னலென வேகம்கொண்டவீரர்
  விதைத்த இடம் அழித்தவனை எண்ணிமனந்தன்னில்
ஏகமென இயற்கையதும் கொன்றவரை மீண்டும்
  கொல்லுமொரு வேதனையை கூடிநின்று பேசும்
தேகமதைப் பெற்றவரும் சேர்ந்து பிறந்தன்பு
   சோதரரும் பிள்ளைகளும் சொல்லியழ நாச
மாகயவர் உழுதநிலம் விதை முளைக்க வென்றோ
  மக்கள் தினம் அழுதநீரில் வேர்முளைக்கு மென்றோ?

தீரமெனும் செடிவளர்ந்து தினம் பூக்கும் வாசம்
  திறனெடுத்து உருவமைக்கும் தீந்தமிழின்தேசம்
கோரமுகக் கயவரவர் குலைநடுங்கி ஓட
  குடிமக்கள் துணிவெடுத்து குலம்காத்து வாழ
ஈரமழை யன்புபொழிந் தின்பவெள்ள மோட
   ஈழநிலம் இறைமையுடன் எமதென்றே ஆக
யார்தமிழர் பிளவில்லாது ஒன்றுஎன ஆகும்
 உறுதி தனைப் பெற்றோமா, எங்கள் வாழ்வு காக்க?


1 comment:

  1. "தோள்தந்து துணிவோடு தேசமதைக் காத்த
    தீரர்களின் கல்லறைகள் தொலைந்த இடம்காணீர்"
    ஆம்...தொலையக் காண்கிறோம்....அருமை!!!

    ReplyDelete