Saturday, January 7, 2012

பார் அதி சின்னக் குழந்தை

(2009வது ஆண்டி ல் எழுதிய கவிதை)

சின்னஞ் சிறுமலரே - செல்லமே
   செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
   ஓடி வழிவதுஏன்
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
  கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
   உன்நிலை என்னசொல்வேன் 

ஓடி வருகையிலே - பின்னால்
    ஆமி துரத்துகிறான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
    அடித்துக் கொல்லுகிறான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
    வானிற் பறந்துவந்து
ஆயிரம் நூறெனவே - குண்டு,
    அள்ளியே போடுகின்றான்

உச்சிதனில் வீழும் - குண்டில்
   உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடியுதடி - ஊரே
   சுட்டகா டாகுதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
   நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
  செத்ததுடன் புதைத்தார்

கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
   கட்டி யணைத்து அன்பை
தந்தவள் மேனியினைக் - கொன்று
    தணலில் வீசிவிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
  பெண்ணே உன்தந்தையுடல்
சன்னம் துளைக்கச் செய்து - வீதி
   சாலையிலே எறிந்தார்


அள்ளி அணைத்திடவே - சொந்தம்
   யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
   மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
   உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
   கூடம் எதுவுமில்லை

என்ன கொடுமைஇது - என்று
   ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
   ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - வாழ்வில்
    ஆயிரம் கொண்டவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
    வாழ்வு மழிந்ததடி

பிள்ளைக் கனியமுததே - உன்போல்
  பேசும்பொற் சித்திரங்கள்
முள்ளி வாய்க் காலினிலே - பூத்து
   மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
   அன்பு சிறுவர்களும்
கொள்ளி வைத்தேமுடித்தார் - கோரம்
    எல்லை கடந்ததடி

இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
   என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
  மோசமிழைத்து விட்டாய்
ஈழத்தமிழ் வயிற்றில் - ஏனோ
   ஊன்றிக் கருவெடுத்தாய்
எங்கள் மண்ணில்மலர்ந்தாய் இதற்கு
  மன்னிப்பே இல்லையடி

சொல்லும் மழைலைஎல்லாம் - மறந்து
   சித்திரமே அழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
    மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்மிதியா - நடந்து
    சோர்ந்த நல்சித்திரமே
நல்லவர் தூங்கவில்லை - மீண்டும்
    நாடு எண்ணி எழுந்தார்

தூர ஒளி யெழுந்து- உன்னை
  தேடிவரும் அமுதே
வீரமெடுத்து அறம் மீண்டும்
  மெல்ல  வரும் முன்னே
யாரும் இல்லைஉனக்கு என்ற
 அச்சம் இனி வேண்டாம்
பாரில் பரந்ததமிழ் அமைக்கும்
 கொள்கை சிறக்குமடி

2 comments:

  1. // வந்தவர் போவதும் சென்றவர் மீள்வதும்
    உண்டென்றுசொல் லுவையோ கிளியே
    அந்த வகையினில் சென்றநம் சொந்தமும்
    வந்துபிறப்ப துண்டோ இனியே
    சுந்தர மைந்தரும் செவ்விழி மாதரும்
    செந்தமிழ்மீது கொண்டோர் அனலே
    சந்தன மாமரம் வெந்தது போயிந்த
    சொந்தமுயிர் கொள்ளு மோ துளிரே// ... மிகவும் அருமை நண்பரே!!!
    "இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
    என்ன தவறு செய்தாய்
    முத்தமிழ் பேசலன்றி - என்ன
    மோசமிழைத்து விட்டாய்" வாழ்த்துக்கள்!!!
    அன்புடன்,
    மு இராமதாசு.

    ReplyDelete