Sunday, January 8, 2012

என் அன்னை, என்தேசம், என்கனவு

என்னோர் எழில்! நிலவோ ஏறிவான் வீதியிலே
மின்னும் தனதொளியை மேதினியி லூற்றுங்கால்
தன்னந் தனிநடந்து தங்கநில வொளிகுளித்து
முன்னே என்பாதையில் மேற்குவழி நடந்தேன்

வெண்மை நிலவொளியின் வீச்சினில் முன்னிருந்த
கண்முன் னெழில்தோற்றம் கைவரைந்த ஓவியமாய்
எண்ணக் கனவுகளில் எழுகின்ற மாயமெனும்
வண்ணம் கலந்திருக்க வழியில் அவள்கண்டேன்

 மண்ணோடு தூசுபட மைவிழிகள் கோபமுற
விண்ணோ டெறித்தநிலா வீசுமொளி மின்னலிலே
பெண்ணின் திடமிழந்து பேசற்கரியவளாய்
திண்மை யிழந்து,வரும் தென்றல் உடல்சரிக்க

நின்றாள் துயர்பெருத்த நீள்விழிகள் நீர்சொரிய
தென்றல் தொடுந்தேகம் தீயெனவே வேகிவிட
கன்னம் எழில்சிதையக் கண்ணீரும் காய்ந்திருக்க
என்னோர் துயரடைந்தாள் ஏதறியேன் என்றதனால்

” பெண்ணே பெருந்தகையே பெயரேது நானறியேன்
கண்ணீர் வழிவதுமென் காரணமும் தானறியேன்
மண்ணில்பெருவாழ்வு மாதுகொண்ட தாய்வதன
வண்ணம் தெரியுதம்மா வந்ததிங்கு ஏதெ”ன்றேன்

நெஞ்சம் அழுதுகொள நிர்க்கதியாய் ஏந்திழையோ
கொஞ்சம் எனதுகுரல் கொடுத்த மனத்துணிவில்
”வஞ்சம் இழைத்தாரே வாழ்விலோர் தீதுதனை
நஞ்சின் நெஞ்சத்திரு நாட்டின் கொடியவர்கள்!

”எந்தன் பெயரீழம் இன்பமுடன் தேன்தமிழைச்
சொந்தம் கொண்டே நிலத்தை சுற்றிவர மைந்தரவர்
வந்தோர் பகையறுத்து வாழ்வுதர வீரமுடன்
செந்தேன் தமிழ்வளர்த்து சீருடனே ஆண்டிருந்தேன்

பூவிரியப் புள்ளினங்கள் பொன்வானில் நீந்திவர
தாவிவிழுந் தோடும்நதி தமிழ்வாழ்த்தி இசைபாட
வாவிதனில் நீரோடி வட்டஅலைப் பூமலர
பூமிதனில் ஈழமெனும் பொன்நாட்டுக் கன்னையிவள்

என்னோர் அழகுடனே ஏற்றமுடன் நானிருக்க
வன்மை கொண்டேயுலகு வாழ்வை அழித்ததையோ
இன்னும் உயிர்களைந்து இதுபோதா ஊரழித்து
பொன்போலும் பூமிதனை பேய்வாழச் செய்தார்கள்

கொஞ்சங் குரல்நடுங்க கோதையுடல் தான்துடித்து
பஞ்சாம் முகில்நடுவே பாயுமிடி மின்னல்பட
நஞ்சின் கொடுமைகொண்ட நாகமொன்று தீண்டியதாய்
நெஞ்சம் துடிதுடித்து நினைவழிய மேலுரைத்தாள்

அந்தோ படுந்துயரம் அத்தனையும் என்சொல்வேன்
நிந்தை புரிந்தவரோ நெஞ்சழவே கேடுசெய்தார்
இந்தோர் நிலையடைய இன்னலிட்ட எத்தர்தனை
வந்தே விரட்டிவிடு வாய்மை நிலைநாட்டிவிடு      .

எங்கே உலகநீதி எங்கே உரிமையென்று,
செங்கோல் பிடித்தவர்கள் செய்வதென்ன கேட்டுவிடு
பொங்கும் தமிழ்க்குரலை பேச்சை நெரித்தழித்து
சங்கை எடுத்தூதி சாவைஎமக் கீந்ததென்ன

பொன்னால் மணிமுடியும் பெற்றதோர் வாழ்வும்
தன்நேர் நிகரற்ற தமிழ்வாழும் தேசமென
மின்னேர் விளைபுயலின் வேகமெடு மைந்தர்களும்
முன்னே துணையிருக்க முத்தமிழின்மூச்செடுத்து

பன்நூற் கலைவளங்கள்; பண்ணிசைகள் நற்றமிழாம்
முன்னோர் செய்காவியங்கள் மூத்தோர் பழங்கலைகள்
என்னை மகிழ்வுசெய்ய எத்தனையோர் இன்பமுடன்
மன்னர் மணிமுடிகொள் மாவீர ஆட்சிகண்டோம்

அணிகொள் அழகோடு அறத்தின் வழிநடந்தோம்
பிணிகொள் அரசுசில போரென்று நீதிகொன்றார்
பணியா உளஉரமும் பாதையிலே நேர்நடையும்
துணிவோ டுயர்மறமும் துள்ளிவரும் போர்முடித்து

குனியா துணர்வுபொங்க கொள்கைவழி நீதியுடன்
தனியாய்அரசுகண்ட தாயின்நிலை இன்றறிவாய்
இனியேன் மௌனமடா இன்னலிடும் பாதகரை
தனியோர் இனமழிக்க தட்டிப்பதில் கேட்டிடடா

ஈழமகள் கண்களிலே எழுந்தோடும் நீராறு
ஆழமன துன்பமதை ஆற்றாமை தான்விளக்க
வீழுமீர் பூங்கரங்கள் வீரமகள் கால்கள்தனும்
பாழும் பகைபிணைத்து பாடுபெருந் துன்பமிட்டார்

கேழாயென் சின்னவனே கீழாம்நிலை யடைந்தோம்
நாளுமவர் திட்டமிட்டே நாட்டின் குடிகொன்றார்
மாளுமிந்த மக்களுயிர் மகனேநீ காத்திடடா
வாழுமிக் காலமதில் வாசல்வரை தள்ளிவைத்தார்

நாளைஎமை வீதியிலே நாட்டோரம் ஆழ்கடலில்
சூழைதனில் தள்ளியெமை சுற்றிவரத் தீயிடுவார்
மாளமுழு தாயெரித்து மண்ணதனை கொண்டிடுவார்
வாழவென நீஎழுந்து வையகத்தை கேட்டுவிடு

இல்லையெனில் நீயறிவாய் எமதழகுத் தமிழ்த்தேசம்
வல்லோர் அரசுகளின் வாயிலுண வாகிவிடும்
மெல்லத் தமிழழியும் மேதினியில் என்பதனை
பொல்லாப் பெரும்புழுகாய் பூமியிலே ஆக்கிவிடு

துள்ளியெழு உன்னுயிரும் துடிக்கத் துணிவுடனே
தெள்ளுதமிழ் வெல்லுமொரு திக்கைக் கருத்திலெடு
கள்ளினிமை பூமென்மை காற்றின் சுகம்யாவும்
உள்ளதமிழ் வாழஇனி உன்கடமை ஆற்றிவிடு

மங்கும் மதியொளியில் மங்கையவள் சொல்லிவிட
எங்கோ இருந்தெழுந்த  இடியோடு புயலெனவே
பொங்கும் பெருஞ்சுழலோ பூவையவள் முன்னுருள
தங்கஒளி தானுருக்க தலைமறைந்து போயினளாம்

****

No comments:

Post a Comment