Tuesday, May 29, 2012

என் வாழ்க்கைப் பாதையில் சில அடிகள்

*********
வானத்தில்மேடை யிட்டு வடிவத்தில் பூவிரித்து
மோனத்தில் ஓம் என்னும் மூலத்து ஓசையிட்டு
ஞானத்தைப் படைத்தவளே நானிங்கு சொல்வதுண்மை
தேனைத் துளிகளிட்டு தீம்பாவைத் தந்திடுவாய்
********************
பிறந்தேன் வளர்ந்தே னொரு பேதைக்கு மகனானேன்
அறந்தேன் எனக்கொண்டு  அழகுற என்தாய் மடியில்
திறந்தே விழிகண்டேன் திருவூராம் பூங்கொடியின்
நிறங்கொள் ஓரூரில் நிமிர்ந்து நடைகொண்டேன்

வளர்ந்தேன் வகையென்ன வளஞ்செழித்த ஊரழகில்
குளம், தேர் கோவில் சிறு குடிசை மலர்க்காடென்று
உளம்தேனுண்ணத் தனி ஊரெல்லாம் சுற்றிடுவேன்
களம்போர் எனக் காட்சி கருமைகொண்டெழ முன்னே

மலரும் மலர்த்தேனும் மயக்குமெழில் வாவியுடன்
பலரும் வழிபட்டே பயனடையும் ஆலயமாம்
குலவுமினி கல்வளைப் பிள்ளையார்கோவிலதை
நிலவுமென் வாழ்நாளில் நெஞ்சம் மறக்காது

ஆனைமுகத் தானை அன்னையவள் துதித்திருக்க
தேனைத் தேடுமொரு சில்வண்டாய் கோவிலதை
நானே சுற்றிடுவேன் நறுந்தேன் உடை பூவும்
வான்தொட்ட வரைவிரியும் வயல்வெளியும் கண்டிருப்பேன்

உச்சிவெயில் மின்ன உள்ளதொரு காட்சியெனும்
பச்சைவயல் பரப்பும் பறந்துசெலும் குருவிகளும்
இச்சை உணர்வெடுத்த ஏகாந்தச் சூழ்நிலையும்
அச்சோ அச்சச்சோ அதுமீண்டும் வாராதோ

கோவில் மணியடிக்க கோபுரத்தே தூங்குமணி
தாவிப் பிடித்தெம்பி தரைவிட்டுத் தொங்கிடவே
மேவி ஊர்முழுதும்  மெல்லப் பரவிடுமாம்
தேவஇசையும் ‘டாண்’  தேனோசை சேர்ந்தெழுமே

பூசை முடிந்தவுடன் போகும் வழிதிரும்ப
ஆசையுடன் நெல்வயலில் ஆடி அயல் திரிந்து
ஓசையெழப் பாடி ஓங்குகதிர் தலைநீவி
நேசப்பறவைகளின் நெஞ்சினித்த கூவல்களால்

காது இனித்திருக்கக் கடும் வெயிலும் திசைமாறி
போதுமெனத் தந்த பொல்லாப்பு நிறுத்துகையில்
ஏதுகவலை யவ்விளம் பிஞ்சுக்  கால்களினால்
ஊதுவிசை காற்றுக் குயர்வரம்பி லோடிடுவோம்

விரிந்தகுளம் வயலில் வீறெழுந்த தாமரைகள்
எரிந்தநிலை தீபமென இயல்பாக மலர்ந்திருக்க
சரிந்தவயற் கதிருள் சட்டென்றோர் தவளையது
இருந்தேஒரு தாவில் எம்பிக் காலூன்றி

துள்ளிநீர்க் குளம்வீழ தோன்றுமலைஅற்புதமாம்
வெள்ளி யலைவிரிய வட்டநிரை யெனமலர்ந்து
தள்ளியது தாமரையைத் தண்குமுதம் அல்லியென
உள்ள முவகையுற ஊர்வசியோ ரம்பையென

ஆடும்நீர்மேடை அழகுமலர் நாட்டியங்கள்
பாடும்சிறு குருவி பண்ணிசைக்கும் ஒருவண்டு
போடும்தவளை இடை புதுத்தாளம் பொன்வயலின்
கூடும் கதிர்நாணிக் கிளுகிளுக்கும் எழில்அழகே


செல்லுகின்ற நாட்களிடை சிலநாள் கதிரறுத்து
இல்லைப் பசுமையென இருக்கின்ற வயல் கண்டு
பொல்லுக் கிழவியுடை பொக்குவாய்ப் பல்லழகாய்
நெற்பயிர்கள் அற்றநிலை நேர்காண நெஞ்சழியும்

கொல்லும் வெயிலிடையும் குடுகுடென நடந்தோடிப்
பொல்லாக் காட்டிடையே போய்மகிழ்வு தேடிடுவோம்
நல்ல தமிழ்கேட்கவென நாவிலினி குளிர் கனியை
சொல்லால் சுடவைத்த சுந்தரனைப் போலேறி

நாவல் மரக்கிளையில் நல்லிணைந்து கீழுறைவோர்
ஆவலெழ வைத்து அருஞ் சுவையும் கண்டிடுவோம்
தாவல் முடிந்தில்லம் தகிப்பில் படுத்திருந்தால்
ஏவல்பேய் பற்றியதாய் என்அம்மை சுற்றிவைப்பாள்

ஈச்சம் காய் பழமாய்ந்து இனிப்பாய் உவர்ப்பென்றும்
கூச்சலிட்டுத் தின்றே குதித்தாடி மகிழ்வதெலாம்
காய்ச்சலெனக் காயுதே கரம்மாறி நிலமயலோன்
ஆட்சியிலே உள்ளதய்யா அன்னியமாய்ப் போய் விடுமோ?

முயலோட முயலின்பின் நானோடி கல்லிடித்து
சுயமாய் விழுந்தெழுந்து  சொரிகின்ற செந்நிறநீர்
பயமின்றி மணல் பற்றிப்  பட்டஇடம் அப்பிவிட்டு
தயங்கி நடை நொண்டி தாவிக்கால் வைத்தேக

குரங்கும் தாவிமரக் கொப்பிடையே தொங்கியெமை
இரங்கும் நிலையாகி இல்லையொரு வாலிவர்க்கு
தரங்கெட்ட இனமோ தடக்கிமண் வீழ்வரென
மரந் தாவும் மன்னவர்கள் மதமெடுத்துக் கூச்சலிட

நடந்தும் திரிந்தோடி நாள்போய் வளர்ந்தவனாய்
விடலை வயதாகி விருப்புடனே கல்விதனை
கடமை உயிர்வாழ்வுக் கானதென்று எண்ணுவதாய்
கடந்த இளவயதில் கற்றவைகள் அற்புதமாம்

இளம்பருவம் ஏடுகளில் ஏற்றறிவு கொள்வதெனில்
களம்நூ லகமென்றே கற்றிடவென் றேகிடுவோம்
அளவையுடன் கணிதமென அவர்கொள்ள என்மனது
நளவெண்பா குறுந்தொகையும் நற்றிணையும் நாடியது

கூட்டலும் கழித்தல்களும் கோணங்களும் பௌதிகமும்
நாட்டின் அரசியலும் நண்பரினம் கற்றிருக்க
பாட்டும் கவிதைகளும் பலநிறைந்த இலக்கியத்தின்
காட்சிக் கனவுகளில் கற்பனையில் நானிருந்தேன்

No comments:

Post a Comment